செய்திகள்

என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் வேலழகன் கொலையில் ரவுடி ஜனா கைது

Published On 2017-05-19 12:33 GMT   |   Update On 2017-05-19 12:33 GMT
என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் வேலழகன் கொலையில் ஆஸ்பத்திரியில் பதுங்கி இருந்த ரவுடி ஜனாவை போலீசார் மடக்கி பிடித்தனர்.

புதுச்சேரி:

திருபுவனை என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், தொழில் அதிபருமான வேலழகன் கடந்த மாதம் 19-ந் தேதி வெடிகுண்டு வீசியும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.

அவரை ஆட்களை ஏவி கொன்றதாக பிரபல தொழில் அதிபர் உதயகுமார் கைது செய்யப்பட்டார். உதயகுமார், வேலழகனின் நண்பராக இருந்து வந்தார். இடையில் அவர்களுக்கிடையே தொழில் போட்டி ஏற்பட்டது. இதன் காரணமாக வேலழகனை கொன்றதாக உதயகுமார் கூறினார்.

உதயகுமாரின் நண்பர் செங்கதிரவன் மற்றும் கலிதீர்த்தாள குப்பத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜனா (வயது 29), ரத்தினவேல், ரமேஷ், கார்த்திகேயன், பூபாலன், சிவராமன் ஆகியோரும் கொலையில் சம்பந்தப்பட்டு இருந்தனர்.

இவர்களில் ஜனா தவிர, அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

ரவுடி ஜனா மட்டும் கைது ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்தான். அவனை பிடிப்பதற்காக பல்வேறு இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஜனா சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ரகசியமாக சிகிச்சை பெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ் பெக்டர் ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். சிகிச்சையில் இருந்த ஜனாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றால் யாரும் சந்தேகப்பட்டு தேட மாட்டார்கள் என கருதி ஜனா அங்கு சிகிச்சை பெற்று வந்தான். ஆனாலும் போலீசார் கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

அவனை போலீசார் இன்று புதுவைக்கு கொண்டு வந்தனர். இங்கு அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

உதயகுமார் போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் வேலழகனை கொல்லும்படி நான் செங்கதிரவனிடம் கூறினேன். அவர் ரவுடி ஜனாவை இதற்காக ஏற்பாடு செய்தார். ஜனா தனது ஆட்கள் மூலம் வேலழகனை கொலை செய்தார் என்று கூறி உள்ளார்.

ஜனாவிடம் விசாரணை நடத்தினால்தான் இது உண்மையா? இல்லையா? என்பது தெரியவரும்.

இந்த கொலையில் மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், அரசியல்வாதிகள் மற்றும் பல தொழில் அதிபர்கள் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

எனவே, ஜனா சொல்லப்போகும் தகவலை அடுத்துதான் இந்த கொலையின் முழு பின்னணி விவரங்களும் வெளியே தெரியவரும். இதனால் மேலும் பலர் கைது ஆவதற்கும் வாய்ப்பு உள்ளது.

ஆரம்பத்தில் கொலையாளிகளை கைது செய்த போது, நம்பர்-1 குற்றவாளியாக (ஏ-1) செங்கதிரவன் சேர்க்கப்பட்டு இருந்தார். தொழில் அதிபர் உதயகுமார் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.

இப்போது இதில் மாற்றம் செய்து உதயகுமாரை நம்பர்-1 குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

Tags:    

Similar News