செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல் போராட்டம்: ஐ.பெரியசாமி உள்பட 3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது

Published On 2017-04-25 11:31 GMT   |   Update On 2017-04-25 11:31 GMT
விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் மறியலுக்கு முயன்ற முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைமையில் எதிர்கட்சிகள் போராட்டம், மறியல் நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி தலைமையில் பல்வேறு கட்சியினர் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோ‌ஷமிட்டபடி மணிக்கூண்டு நோக்கி சென்றனர். அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

போராட்டத்தில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சந்தானம், ஆதிதமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, எர்ணாவூர் நாராயணன் தலைமையிலான கட்சி உள்பட பல்வேறு எதிர்கட்சிகள் போராட்டத்தில் கலந்து கொண்டன. அவர்களை போலீசார் கைது செய்தனர்.


பழனி பஸ் நிலையத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஊர்வலகமாக வந்து மறியலுக்கு முயன்றனர். சுமார் 500-க்கும் மேற்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அரசக்கரபாணி தலைமையில் பல்வேறு எதிர்கட்சியினர் ஊர்வலமாக வந்து பஸ் நிலையத்தில் மறியல் செய்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., கம்யூனிஸ்ட்டு உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Similar News