செய்திகள்

ஆனைமலை பகுதியில் வறட்சியால் 57 ஆயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் பாதிப்பு

Published On 2017-02-17 09:51 GMT   |   Update On 2017-02-17 09:52 GMT
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆனைமலை வட்டாரத்தில் மிகக் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் நிலைகள், கிணறுகள் மற்றும் குட்டைகள் வறண்டு விட்டன.
ஆனைமலை:

ஆனைமலை வட்டாரத்தில் வேளாண்மை பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் தென்னை சாகுபடியில் முதலிடம் பெற்ற வட்டாரமாக ஆனைமலை வட்டாரம் திகழ்ந்து வருகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆனைமலை வட்டாரத்தில் மிகக் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் நிலைகள், கிணறுகள் மற்றும் குட்டைகள் வறண்டு விட்டன.

ஆயிரத்து 500 அடிக்கும் அதிகமாக ஆழ் குழாய் அமைத்தாலும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சியை ஆய்வு செய்ய குழுவை அனுப்பியது.

அதன்படி ஆனைமலை வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து வறட்சி நிலவரம் குறித்து கணக்கெடுக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றது. தற்போது கணக்கெடுக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.

இது குறித்து வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் பழனிகுமார் கூறியதாவது:-

ஆனைமலை வட்டாரத்தில் சுமார் 52 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. பல இடங்களில் தென்னை மரங்களில் மகசூல் 70 சதவீதம் குறைந்துள்ளதும் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

இதன் விபரங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Similar News