செய்திகள்

2வது டி20 போட்டி - பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

Published On 2019-02-03 17:49 GMT   |   Update On 2019-02-03 17:49 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பரபரப்பான கட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா. #PAKvSA
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.



இந்நிலையில், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹென்ரிக்ஸ் 28 ரன்னிலும், ஜேனிமேன் மலான் 33 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய வாண்டர் டுசான் 27 பந்தில் 45 ரன்னில் அவுட்டானார். மில்லர் அதிரடியாக ஆடி 29 பந்தில் 5 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே பாபர் அசாம் அதிரடியாக ஆடினார். தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். இதனால் அணியின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

45 ரன்களில் பகர் சமான் விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான். அவர் 14 ரன்னில் அவுட்டானார். அதிரடி ஆட்டம் ஆடிய பாபர் அசாம் 58 பந்தில் ஒரு சிக்சர், 13 பவுண்டரியுடன் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து பொறுப்புடன் ஆடிய ஹுசைன் தலாட் 55 ரன்னில்  வெளியேறினார்.

இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என கைப்பற்றி அசத்தியது. #PAKvSA
Tags:    

Similar News