தமிழ்நாடு

ஊட்டி தாவரவியல் பூங்கா முன்பு குவிந்திருந்த சுற்றுலா பயணிகள்.

இ-பாஸ் நடைமுறைக்கு உள்ளூர் மக்கள் வரவேற்பு: வியாபாரிகள் கலக்கம்

Published On 2024-04-30 06:27 GMT   |   Update On 2024-04-30 09:21 GMT
  • ஊட்டிக்கு சீசன் நேரங்களில் தினமும் 20 ஆயிரத்து 11 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2 ஆயிரத்து 2 வாகனங்களும் வந்து செல்கின்றன.
  • இ-பாஸ் நடைமுறை என்று வரும்போது ஒரு நாளைக்கு இத்தனை பேர் செல்லலாம் என்று அறிவிக்க வாய்ப்புள்ளது.

ஊட்டி:

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா வந்த வண்ணம் இருப்பார்கள். குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் அலைமோதும்.

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தி வருவதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், வெயிலில் இருந்து தப்பிக்க இதமாக சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் ஊட்டிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இன்னும் சில தினங்களில் நீலகிரியில் கோடைவிழாவும் தொடங்க உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஊட்டிக்கு சீசன் நேரங்களில் தினமும் 20 ஆயிரத்து 11 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2 ஆயிரத்து 2 வாகனங்களும் வந்து செல்கின்றன. இதன் காரணமாக எப்போதுமே நீலகிரியில் உள்ள அனைத்து சாலைகளிலுமே போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும்.

அதிலும் குறிப்பாக ஊட்டி-மேட்டுப்பாளையம், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை, ஊட்டி நகர பகுதிகளில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்பதையும் காண முடியும். இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்துவது என்பது பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.

இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வருகிற 7-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல கொரோனா காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்ததை போன்று இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்துவது மற்றும் என்னென்ன மாதிரியான நடைமுறைகளை கொண்டு வருவது என வருவாய்த்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஒன்றாக இணைந்து ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு விரைவில் இ-பாஸ் நடைமுறைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என தெரிகிறது. இதேபோல் இ-பாஸ் பெறுவதற்காக என்று தனியாக இணைய தளமும் தொடங்கப்பட்டும், அதுவும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.

ஊட்டிக்கு செல்வோர் இ-பாஸ் எடுத்து வர வேண்டும் என்ற நடைமுறையானது உள்ளூர் மக்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:-

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகிறார்கள். கோடை சீசனில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் இங்குள்ள அனைத்து சாலைகளிலுமே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இதனால் உள்ளூர் பொதுமக்களாகிய நாங்கள் அவரச தேவைக்கு எங்காவது புறப்பட்டால் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை உள்ளது. அத்துடன் வாகனங்கள் அதிகளவில் வருவதால், அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையானது இங்குள்ள இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

தற்போது ஐகோர்ட்டு அறிவித்துள்ள இந்த இ-பாஸ் நடைமுறையை நாங்கள் வரவேற்கிறோம். இதன் மூலம் நீலகிரிக்குள் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் வந்து செல்கின்றன என்பது தெரியும். போக்குவரத்து நெரிசலும் குறையும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

உள்ளூர் பொதுமக்கள் இ-பாஸ் நடைமுறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பானது நீலகிரியில் உள்ள வியாபாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுற்றுலாவை நம்பிதான் ஏராளமானோர் வியாபாரம் செய்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தால் தான் இவர்களுக்கு வியாபாரம் இருக்கும். இ-பாஸ் நடைமுறை என்று வரும்போது ஒரு நாளைக்கு இத்தனை பேர் செல்லலாம் என்று அறிவிக்க வாய்ப்புள்ளது.

அதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை குறையும் நிலை உள்ளதாலும், அதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் அரசு, வியாபாரிகள் கருத்தையும் நலனில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டங்களை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News