செய்திகள்

டோனி, அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் 4-வது வரிசையில் ஆடும் வீரர் யார்?: விராட் கோலி பதில்

Published On 2019-01-29 09:12 GMT   |   Update On 2019-01-29 09:12 GMT
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4-வது இடத்தில் களம் இறங்கும் வீரர் யார் என்பது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #NZvIND
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து மண்ணில் விராட் கோலி தலைமையிலான அணி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்திய அணி கடந்த 11 ஒருநாள் தொடரில் 10 தொடர்களை வென்றுள்ளது. ஆனாலும் 4-வது வரிசையில் விளையாடும் திடமான வீரர் குறித்து இன்றும் முடிவுக்கு வந்த பாடில்லை.

கடந்த அக்டோபரில் அம்பதி ராயுடு 4-வது வரிசையில் களம் இறங்க கேப்டன் விராட் கோலி ஆதரவு தெரிவித்தார். ஆனால் ரோகித் சர்மா சமீபத்தில் பேசும்போது, “டோனிதான் 4-வது வீரர் வரிசைக்கு பொருத்தமானவர்” என்று அவரது விருப்பத்தை தெரிவித்து இருந்தார். இதேபோல் தினேஷ் கார்த்திக்கும் அந்த வரிசையில் நன்றாக ஆடக்கூடியவர்.

உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு 4-வது வரிசையில் விளையாடும் வீரர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்தநிலையில் 4-வது வீரர் வரிசை குறித்து கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-

கடந்த 6 போட்டிகளை வைத்து பார்க்கும்போது (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து) 4-வது வரிசையில் ஆடும் வீரரை திடப்படுத்த வேண்டியுள்ளது. அம்பதி ராயுடு நன்றாக விளையாடும்போது அவர்தான் சரி என்ற நம்பிக்கை வருகிறது.

தினேஷ் கார்த்திக்கும் நல்ல நிலையில் இருக்கிறார். தேவைப்பட்டால் அவரை 4-வது வரிசையில் இறக்கலாம். மிடில் ஆர்டரை மாற்றி இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர் நம்பிக்கையுடன் ஆடுவார். டோனி பந்தை நன்றாக அடித்து ஆடுகிறார். ஆகவே அனைவரும் நல்ல நிலையில் இருப்பதால் 4-வது வீரர் வரிசைப்பற்றிய கவலை இப்போதைக்கு இல்லை.

நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளில் வெற்றி பெற்று விட்டோம் என்று நினைக்காமல் தொடர்ந்து தீவிரமாக விளையாட வேண்டும். பந்துவீச்சில் முகமது‌ ஷமி, புவனேஸ்வர் குமார் நல்ல நிலையில் உள்ளனர். ஹர்த்திக் பாண்டியாவும் நன்றாக வீசினார். குல்தீப் யாதவ், சாஹல் தரமான பந்து வீச்சாளர்கள். ஒட்டு மொத்தமாக வீரர்களின் செயல்பாடு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
Tags:    

Similar News