செய்திகள்

அடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா

Published On 2018-12-10 05:31 GMT   |   Update On 2018-12-10 07:45 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDvAUS #AdelaideTest #ashwin
அடிலெய்டு:

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தன. 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். நிதானமாக ஆடிய ஷேன் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஜோடி கவனமாக விளையாடிய நிலையில், 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்னுடனும், ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஷேன் மார்ஷ் அரை சதம் கடந்தார். ஆனால் அவர் 60 ரன்களில் விக்கெட்டை இழந்தார். முன்னதாக ஹெட் 14  ரன்களிலும் அவுட் ஆனார். விக்கெட்டை காப்பாற்ற கடுமையாக போராடிய டிம் பெயின் 41 ரன்கள் சேர்த்த நிலையில், அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். 187 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடிய ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் இருவரும் தலா 28 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் நாதன் லயன் மட்டும் தாக்குப்பிடித்து ஆடியதால், நேரம் செல்லச்செல்ல ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் மறுமுனையில் ஆடிய ஹாசில்வுட் 13 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.


இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 291 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த இன்னிங்சில் இந்தியா தரப்பில் அஸ்வின், பும்ரா, ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

ஆஸ்திரேலியாவின் கடைசி 4 விக்கெட் 135 ரன்களை எடுத்து இந்தியாவை சற்று தடுமாற வைத்து விட்டது. இந்த டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த புஜாரா ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவர் முதல் இன்னிங்சில் 123 ரன்னும், 2-வது இன்னிங்சில் 70 ரன்னும் எடுத்தனர்.

இந்திய அணி 12-வது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தற்போது சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இதற்கு முன்பு 11 முறையும் முதல் டெஸ்டில் வென்றது இல்லை. தற்போது அந்த வரலாற்றை மாற்றி அடிலெய்டு டெஸ்டில் சாதனையுடன் வெற்றி பெற்று கணக்கை தொடங்கி இருக்கிறது.

இந்த வெற்றி மூலம் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 14-ந்தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. #INDvAUS #AdelaideTest #ashwin
Tags:    

Similar News