செய்திகள்

2வது டி20 போட்டி - ரோகித்தின் அபார சதத்தால் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா

Published On 2018-11-06 17:41 GMT   |   Update On 2018-11-06 19:02 GMT
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் ரோகித்தின் அபார சதத்தால் இந்தியா வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #INDvWI #RohitSharma
லக்னோ:

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
 
இந்நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்றது. லக்னோ மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.இருவரும் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்த நிலையில் ஷிகர் தவான் 43 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய ரிஷப் பண்ட் 5 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.



ஆனாலும் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 61 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சர்கள் அடித்து 111 ரன்கள்  எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். லோகேஷ் ராகுல் 14 பந்தில் 26 ரன் எடுத்து அட்வுடாகாமல் இருந்தார். இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு195 ரன்கள் எடுத்தது.

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்திய பந்து வீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பால் அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

இதையடுத்து, 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #INDvWI #RohitSharma
Tags:    

Similar News