செய்திகள்

இலங்கைக்கு எதிரான 2-வது டி20: 36 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

Published On 2017-10-29 17:39 GMT   |   Update On 2017-10-29 17:39 GMT
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபுதாபி:

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வந்தது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய இலங்கை, ஒருநாள் தொடரை 0-5 என தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது. அடுத்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பகர் சமானும், உமர் அமீனும் களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. பகர் சமான் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முனவீரா பந்தில் போல்டானார். பகர் சமான் - உமர் அமீன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தது.



அதன்பின்னர் பாபர் அஸாம் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய உமர் அமீன் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து பாபர் அஸாமுடன், சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடிய சோயிப் மாலிக் அரைசதம் அடித்தார். அவர் 2 பந்துகளே மீதமிருந்த நிலையில் 24 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் களமிறங்கிய பஹீம் அஸ்ரஃப் நோபாலாக வீசப்பட்ட கடைசி பந்தையும், அடுத்ததாக வீசப்பட்ட ஃப்ரீ-ஹிட் பந்தையும் சிக்ஸராக மாற்றினார்.

இதனால் பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. ஒரு முனையில் நிலைத்துநின்று விளையாடிய பாபர் அஸாம் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கை அணி பந்துவீச்சில் விகும் சஞ்ஜெயா, தில்சான் முனவீரா, இசுரு உடானா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தனுஷ்கா குணதிலகாவும், தில்ஷான் முனவீராவும் களமிறங்கினர். முனவீரா ஒரு ரன்களிலும், குணதிலகா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பாகிஸ்தான் அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தசுன் ஷங்கனா மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். இலக்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் பாகிஸ்தான் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் மொகமது ஆமீர் 4 விக்கெட்களும், பஹிம் அஷ்ரஃப் 2 விக்கெட்களும், இமாத் வாசிம், மொகமது ஹபீஸ், ஹசன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றி இலங்கை அணியை ஒயிட்-வாஷ் செய்தது. பாகிஸ்தானின் சோயிப் மாலிக் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்றார்.
Tags:    

Similar News