செய்திகள்

காட்லின் தலைவணங்க உசைன் போல்ட் தகுதியானவர்தான்: விராட் கோலி சொல்கிறார்

Published On 2017-08-07 11:12 GMT   |   Update On 2017-08-07 11:12 GMT
காட்லின் தலைவணங்க உசைன் போல்ட் தகுதியானவர். அவரை விட சிறந்த வீரர் யாரும் இல்லை என விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் உசைன் போல்ட். சர்வதேச போட்டிக்கு அடியெடுத்து வைத்ததில் இருந்து ஒருமுறை கூட தோற்றது கிடையாது என்ற சாதனையுடன் லண்டனில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் கலந்து கொண்டார்.

இந்த தொடர்தான் அவருடைய கடைசி தொடர் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த தொடரிலும் வெற்றி பெற்று தோற்கடிக்க முடியாத வீரராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் 35 வயதான ஜஸ்டின் காட்லின் அதிர்ச்சிகரமாக உசைன் போல்டை தோற்கடித்தார். உசைன் போல்ட் தோல்வியை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உசைன் போல்டின் தீவிர ரசிகர். அவர் ஓட்டத்தை தவறாமல் பார்த்து ரசிப்பார். இந்திய அணி கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீசில் விளையாடிக் கொண்டிருக்கும்போது ரியோ ஒலிம்பிக் நடைபெற்றது. உசைன் போல்ட் ஓட்டத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக கூறியிருந்தார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் காட்லின் வெற்றி பெற்றாலும், தலைவணங்கி உசைன் போல்டுக்கு பிரியாவிடை கொடுத்தார். இந்த மரியாதைக்கு உசைன் போல்ட் தகுதியானவர். அவரை விட சிறந்த வீரர் தடகளத்தில் யாரும் கிடையாது என்று கோலி கூறியுள்ளார்.



மேலும் உசைன் போல்ட் குறித்து கூறுகையில் ‘‘வீரர்கள் சிறப்பாக விளையாடி சாதனைப் படைக்கும்போது, அதற்காக எவ்வளவு கடின பயிற்சி எடுத்திருப்பார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். இது மிகவும் தேவையானது. நீங்கள் வெற்றி பெறும்போது மற்றவர்கள் உங்களை பாராட்டுவார்கள்.



காட்லின் தலைவணங்க உசைன் போல்ட் தகுதியானவர். ஏனென்றால், அவரை விட தடகளத்தில் சிறந்தவர் எவரும் இல்லை. இது அவருடைய கடைசி ஓட்ட பந்தயம். நான் மீண்டும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். நாங்கள் இருவரும் புமா தடகள வீரர்கள். அவரது சாதனைகள் எளிதில் முறியடிக்கப்படும் என்று என்னால் நினைக்க முடியவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News