செய்திகள்

2 ரன்னில் உலக சாதனையை தவறவிட்ட வார்னர் - ஹெட் ஜோடி

Published On 2017-01-26 10:10 GMT   |   Update On 2017-01-26 10:11 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வார்னர் - ஹெட் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 284 ரன்கள் குவித்தது. இந்த ஜோடி 2 ரன்னில் உலக சாதனையை தவறவிட்டது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி வார்னர், ட்ரேவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார்கள். 78 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்த வார்னர், 128 பந்தில் 19 பவுண்டரி, 5 சிக்சருடன் 179 ரன்கள் குவித்தார். 121 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் அடித்த ட்ரேவிஸ் ஹெட் 137 பந்தில் 128 ரன்கள் சேர்த்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 41.3 ஓவரில் 284 ரன்கள் குவித்தது. இதற்கு முன் இலங்கையின் ஜெயசூர்யா - உபுல் தரங்கா ஜோடி கடந்த 2006-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 286 ரன்கள் குவித்ததே தொடக்க ஜோடியின் அதிகபட்ச ரன்னாக இருந்தது.

முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடிகள் விவரம்

இன்று ஹெட்-வார்னர் ஜோடி 284 ரன்கள் குவித்து 2-வது இடத்தைப்பிடித்துள்ளது. 2 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் இலங்கை ஜோடியின் சாதனையை சமன் செய்திருக்கும் அந்த வாய்ப்பை 2 ரன்னில் தவறவிட்டுள்ளது.

தில்சன் - தரங்காக ஜோடி ஜிம்பாப்வே அணிக்கெதிராக 282 ரன்களும், மெக்கல்லம் - மார்ஷல் ஜோடி அயர்லாந்துக்கு எதிராக 274 ரன்களும், கங்குலி - தெண்டுல்கர் ஜோடி கென்யாவிற்கு எதிராக 258 ரன்களும் குவித்துள்ளன.

Similar News