இந்தியா

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் 2 கோடி உயிர் இழப்புகள் தடுக்கப்பட்டன- உலகம் முழுவதும் நடந்த ஆய்வில் கண்டுபிடிப்பு

Published On 2022-06-24 10:11 GMT   |   Update On 2022-06-24 10:11 GMT
  • கொரோனாவின் முதல் அலையின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் அதற்கு அடுத்தடுத்து வந்த அலைகளின் போது ஏற்படவில்லை.
  • இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசியே என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது. இதையடுத்து இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டன.

புதுடெல்லி:

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டில் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது.

கொரோனாவின் அறிகுறிகள் மற்றும் அதனை தடுப்பதற்கான மருத்துவ முறைகளை வல்லுனர்கள் கண்டுபிடிக்கும் முன்பு இந்நோய் பலரை பலிவாங்கி விட்டது.

அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து என அனைத்து நாடுகளையும் அலற வைத்த இந்நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ நிபுணர்கள் தொடர் முயற்சியில் ஈடுபட்டனர்.

மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் தொடர் முயற்சிக்கு பலன் கிடைத்ததை தொடர்ந்து கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பலத்த ஆராய்ச்சிக்கு பின்னர் அந்த மருந்து ஊசி மூலம் மக்களுக்கு செலுத்தப்பட்டது.

உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்ததை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டது.

கொரோனாவின் முதல் அலையின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் அதற்கு அடுத்தடுத்து வந்த அலைகளின் போது ஏற்படவில்லை.

இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசியே என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது. இதையடுத்து இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன்முடிவுகள் சமீபத்தில் வெளியானது.

இந்த ஆய்வில் தடுப்பூசி செலுத்தி கொண்டதின் மூலம் உலகம் முழுவதும் சுமார் 2 கோடி இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதற்கு முன்பு இதுபோன்ற பெருந்தொற்று நோய்கள் ஏற்பட்ட போது நடந்த உயிரிழப்புகளை ஒப்பிட்டு பார்க்கும் போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பு குறைவாக இருந்தது தெரியவந்தது. இதன்மூலம் தடுப்பூசி செலுத்த தொடங்கிய முதல் ஆண்டிலேயே உலகம் முழுவதும் சுமார் 2 கோடி உயிர் இழப்புகள் தடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் கூறும்போது, தடுப்பூசிகள் மூலம் கொரோனா மரணங்கள் பெருமளவு தடுக்கப்பட்டன.

அதே நேரம் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியபடி தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கை எட்டியிருந்தால் இன்னும் அதிக உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம் என கூறியுள்ளது.

Tags:    

Similar News