இந்தியா (National)

அரசியல் குழப்பம்- ஜே.ஜே.பி. எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு?

Published On 2024-05-10 10:45 GMT   |   Update On 2024-05-10 10:45 GMT
  • அரியானா சட்டசபையின் பதவிக் காலம் வருகிற அக்டோபர் மாதம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்திய தேசிய லோக் தளம், அரியானா ஹோகித் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினா் உள்ளனா்.

சண்டிகர்:

அரியானாவில் முதல்-மந்திரி நாயப் சிங் சைனி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கடந்த 8-ந்தேதி வாபஸ் பெற்றனா். அத்துடன், முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

90 உறுப்பினா்களைக் கொண்ட அரியானா பேரவையில் தற்போது 88 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா். பா.ஜ.க.வுக்கு 40, காங்கிரசுக்கு 30, ஜே.ஜே.பி. கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா். இந்திய தேசிய லோக் தளம், அரியானா ஹோகித் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினா் உள்ளனா். இதுதவிர 6 சுயேச்சைகள் உள்ளனா்.

அரியானாவில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜே.ஜே.பி. கடந்த மாா்ச் மாதம் விலகிய நிலையில், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்தது. அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி நாயப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது.

இந்த நிலையில் பா.ஜ.க. அரசுக்கான ஆதரவை 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் திரும்பப் பெற்றதால், அக்கட்சிக்கு 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையில் 2 இடங்கள் அக்கட்சிக்கு குறைவாக உள்ளன.

பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வரப்பட்டால், அதை ஆதரிக்க தயாா் என்று ஜே.ஜே.பி. தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஜே.ஜே.பி. தலைவரும் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான துஷ்யந்த் சவுதாலா, மாநில கவனர்னருக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அரியானா பா.ஜ.க. அரசு பெரும்பான்மையை இழந்திருப்பது தெளிவாகியுள்ளது. தற்போதைய அரசியல் குழப்பத்தை கருத்தில் கொண்டு, அரசமைப்புச் சட்டப் பிரிவு 174-ன்கீழ் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

பா.ஜ.க. அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத பட்சத்தில், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பெரும்பான்மையை இழந்துவிட்ட பா.ஜ.க. அரசு, தாா்மீக அடிப்படையில் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான பூபிந்தா் சிங் ஹூடா வலியுறுத்தி உள்ளாா்.

மேலும், மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதற்கிடையே முதல்-மந்திரி நாயப் சிங் சைனி கா்னாலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநில அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. கடந்த மாா்ச் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றோம். நேரம் வரும்போது, மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் முதல்-மந்திரி மனோகா் லால் கட்டார் கூறுகையில், "பா.ஜ.க.வுடன் பல எம்.எல்.ஏ.க்கள் தொடா்பில் இருப்பதால் கவலைப்பட எதுவுமில்லை" என்றாா்.

ஜே.ஜே.பி. கட்சி எம்.எல்.ஏ.க்களில் 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவளிப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த 4 எம்.எல்.ஏ.க்களும் நேற்று ரகசியமாக முன்னாள் முதல்-மந்திரி கட்டாரை சந்தித்துப் பேசினார்கள். எனவே அரியானா பா.ஜ.க. அரசுக்கு ஆபத்து ஏற்படாது என்று கூறப்படுகிறது.

அரியானா சட்டசபையின் பதவிக் காலம் வருகிற அக்டோபர் மாதம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News