இந்தியா

சோனியா, ராகுல் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல: பா.ஜனதா கடும் தாக்கு

Published On 2022-08-05 02:23 GMT   |   Update On 2022-08-05 02:23 GMT
  • விசாரணை அமைப்புகளை காங்கிரஸ் தலைவர்கள் மிரட்டுகின்றனர்.
  • ஊழல் மற்றும் சட்டத்தை மீறுவதற்குதான் ராகுல் காந்திக்கு பயமில்லை.

புதுடெல்லி :

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.

கட்சித்தலைவர் சோனியா மற்றும் ராகுல் ஆகியோரை பயங்கரவாதிகள் போல நடத்துவதாக கூறியுள்ள காங்கிரஸ் தலைவர்கள், இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பி அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு அஞ்சமாட்டோம் என்றும், அமலாக்கத்துறை மூலம் தங்களை மிரட்ட முடியாது என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.

காங்கிரசின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அவர்கள் (காங்கிரசார்) முதலில் கொள்ளையடித்தார்கள். தற்போது நாடு முழுவதும் அராஜகத்தை பரப்ப முயற்சிக்கிறார்கள். விசாரணை அமைப்புகளை காங்கிரஸ் தலைவர்கள் மிரட்டுகின்றனர்.

சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் தாங்கள் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த நாடு அரசியல் சட்டப்படி ஆளப்படுகிறது.

ஊழல் மற்றும் சட்டத்தை மீறுவதற்குதான் ராகுல் காந்திக்கு பயமில்லை. அவர் சட்டத்திற்கு பயப்படுகிறார் என்பதும் உண்மை. அல்லது நீதித்துறை மூலம் நேர்மையானவர் என்பதை நிரூபித்திருக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைவர்களை அவர்களது வீட்டிலேயே அமலாக்கத்துறை சென்று விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் அத்தகைய வி.வி.ஐ.பி. கலாசாராத்தை பிரதமர் மோடி நிறுத்தி விட்டார்.

காங்கிரஸ் தலைவர்கள் மீதான விசாரணையை ரத்து செய்ய முடியாது என்ற டெல்லி ஐகோர்ட்டு உத்தரவில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடவில்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு மீது நம்பிக்கை உள்ளதா? என்பதை சோனியாவும், ராகுலும் தெரிவிக்க வேண்டும்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், ஒட்டுமொத்த பணப்பரிமாற்றம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு கவுரவ் பாட்டியா தெரிவித்தார்.

Tags:    

Similar News