இந்தியா

தவறான இந்திய வரைபடம் வெளியிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சசிதரூர் எம்.பி.

Published On 2022-10-01 04:46 GMT   |   Update On 2022-10-01 04:46 GMT
  • வரைபடம் வெளியானதும், அதனை பாரதிய ஜனதா கட்சியினர் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தனர்.
  • சசிதரூர் இதுபோல சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் சசிதரூர் எம்.பி.யும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் கட்சி தொண்டர்களுக்கு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டார்.

இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டால் கட்சியை சீர்படுத்தவும், வெற்றிக்கோட்டை நோக்கி அழைத்து செல்லவும் என்னென்ன செய்வேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

அதோடு அந்த வாக்குறுதி பட்டியலில் இந்திய வரைபடமும் இடம் பெற்றிருந்தது. அந்த வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள் மற்றும் லடாக் பகுதிகள் இடம் பெறவில்லை.

இந்த வரைபடம் வெளியானதும், அதனை பாரதிய ஜனதா கட்சியினர் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தனர். பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா இதுகுறித்து கூறும்போது, இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என விரும்பும் சசிதரூர், இந்தியாவை துண்டாட நினைக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனை அறிந்த சசிதரூர், தனது தேர்தல் அறிக்கையில் இருந்த தவறான இந்திய வரைபடத்தை உடனே நீக்கிவிட்டார். மேலும் தவறான பதிவு வெளியிட்டதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு கொண்டார்.

தனது பிரச்சார குழுவினர் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும், இதற்காக வருந்துவதாகவும் அவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.

சசிதரூர் இதுபோல சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோல அவர் பலமுறை சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தின் போதும் சசிதரூர் வெளியிட்ட இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடம் பெறாமல் இருந்தது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News