search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shashi tharoor"

    • கேரளாவின் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பில் சசி தரூர் போட்டியிடுகிறார்.
    • பா.ஜ.க. ஆட்சியின் விலைவாசி உயர்வு பற்றி பேச வேண்டிய நேரம் இது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசி தரூர் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் எக்ஸ் தளத்தில், பா.ஜ.க. ஆட்சியின் விலைவாசி உயர்வு பற்றி பேச வேண்டிய நேரம் என பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சசி தரூர் வெளியிட்டுள்ள பதிவில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் நிலவும் விலைவாசி உயர்வு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் பால் 34 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 58 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ டீத்தூள் 143 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 284 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ சர்க்கரை 30 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 44 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டர் விலை 413 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 903 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ இஞ்சி 63 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ ஏலக்காய் 557 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 1113 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

    • இரு அணியினரின் வெற்றி வாய்ப்பு தற்போது பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது
    • எதிரணியினர் காட்டும் வேகத்தை பொறுத்தே பா.ஜ.க.வின் வீழ்ச்சி இருக்கும் என்றார் தரூர்

    இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.

    கூட்டணி அமைப்பதில் இரு அணியினரும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    இரு அணியினரின் வெற்றி வாய்ப்பு குறித்து அச்சு, காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பலர் விவாதித்து வருகின்றனர்.

    சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தனித்து 370 இடங்களுக்கு அதிகமாக வெல்லும் என கூறியிருந்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    2019ல் பா.ஜ.க. கண்ட வெற்றியை மீண்டும் அக்கட்சி பெறுவது கடினம்.

    2019 தேர்தலிலேயே பல மாநிலங்களில் அக்கட்சி வெல்லக் கூடிய அனைத்து இடங்களையும் கைப்பற்றி விட்டது.

    இனி ஏற்றம் இருக்காது; இறங்குமுகம்தான். அக்கட்சியின் வீழ்ச்சி எதிர் அணியினர் காட்ட போகும் வேகத்தை பொறுத்தே இருக்கும்.

    2019ல் அரியானா, ராஜஸ்தான், ம.பி., கர்நாடகா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மிக அதிகமாக வென்றது. அங்கெல்லாம் அவர்கள் அடைய வேண்டிய உச்சத்தை அடைந்து விட்டார்கள்.

    இதே எண்ணிக்கையில் அவர்களால் மீண்டும் வெற்றி பெற இயலாது.

    இம்முறை பா.ஜ.க.விற்கு வாக்கு சதவீதம் அதிகரிக்கலாமே தவிர, தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லை.

    வெற்றி பெற்று விடுவோம் எனும் பா.ஜ.க.வின் இறுமாப்பே எதிர் அணியினருக்கு பலம்.

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

    • தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன்.
    • திருவனந்தபுரத்தில் எனது வேட்புமனுவை கட்சி அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் கேரளாவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. கேரள மாநிலத்தில் ஆலப்புழா, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, திருவனந்தபுரம், பொன்னானி, எர்ணாகுளம், வடகரை, கண்ணுர், மாவேலிக்கரை, கோழிக்கோடு, கொல்லம், மலப்புர, வயநாடு, சாகர்கோடு, ஆலந்தூர், திருச்சூர், கோட்டயம், பாலக்காடு ஆகிய 20 மக்களவை தொகுதிகள் உள்ளன.

    அந்த தொகுதிகளை கைப்பற்றும் வகையில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன.


    இந்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியிருக்கிறார்.

    திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன். கட்சியின் முடிவுக்காக காத்திருக்கிறேன். திருவனந்தபுரத்தில் எனது வேட்புமனுவை கட்சி அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    • அனைத்து ராம பக்தர்களும் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பா.ஜ.க. விரும்பலாம்.
    • அனைவருக்கும் பொதுவான ராமரை பா.ஜ.க.விடம் விட்டுத்தர முடியாது என்றார் சசிதரூர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் நம்பும் மற்றும் தினமும் பிரார்த்தனை செய்யும் ஒரு கடவுளை நான் ஏன் பா.ஜ.க.விடம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை?

    அனைத்து ராம பக்தர்களும் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பா.ஜ.க. விரும்பலாம். ஆனால் ஒவ்வொரு ராம பக்தரும் பா.ஜ.க. ஆதரவாளர்களா? என் கருத்துப்படி, இல்லை.

    அனைவருக்கும் பொதுவான ராமரை பா.ஜ.க.விடம் விட்டுத்தர முடியாது.

    மதச்சார்பின்மை என்பது மதங்களே இல்லாமல் இருப்பதல்ல. அவரவர் விருப்பத்திற்கேற்ப மதத்தைப் பின்பற்றும் பன்மைத்துவமே ஆகும்.

    நான் கோவிலுக்குச் சென்றால் கடவுளை வழிபடுவது மட்டுமே நோக்கமாகக் கொண்டு செல்வேன் என தெரிவித்தார் .

    • திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார்.
    • இளைஞர்களுக்கு இடம் அளிக்க வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டதாக நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், மக்களவை எம்.பி.யுமான சசி தரூர், அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    திருவனந்தபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியின்போது அவர் கூறியதாவது:-

    ஒரு கட்டத்தில் இளைஞர்கள் இடம் அளிக்க வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டதாக நம்புகிறேன். இது என்னுடைய எண்ணம்தான். அதேவேளையில் அரசியலில் ஒருபோதும் என்பதை ஒருபோதும் சொல்லக்கூடாது என்ற முழக்கம் உள்ளது. இது எனது கடைசி தேர்தலாக இருக்கும் என்று நினைக்கிறேன் என நான் ஒருபோதும் சொல்லவில்லை" என்றார்.

    காங்கிரஸ் தலைவர் திருவனந்தபுரத்தில் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்றால், அது தனது கடைசித் தேர்தலைப்போல முழு உற்சாகத்துடன் மக்களுக்கு தன்னால் முடிந்ததைச் செய்வேன் என்று கூறினார்.

    காங்கிரஸில் முக்கிய தலைவராக இருக்கும் சசி தரூர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு சென்றார். அப்போது சுமார் 95 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்பின் தொடர்ந்து 2014 மற்றும் 2019-ல் தொடர்ந்து வெற்றி பெற்றார்.

    அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரிந்தார். ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு இந்தியா பிரதிநிதியாக அதிகாரப்பூர்வமாக போட்டியாளராக அறிவிக்கப்பட்டார். ஏழு பேர் போட்டியிட்ட நிலையில், 2-வது இடம் பிடித்தார்.

    • போட்டியிட்டால் அதுவே தனக்கு இறுதி தேர்தலாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
    • என்னை மாற்றுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது என்று கூறினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் காங்கிரஸ் தலைவர் சசிதரூர். இவர் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலநது கொண்டு பேசினார்.

    அப்போது அவர் வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் 4-வது முறையாக போட்டியிட தயாராக இருப்பதாவும், இறுதி முடிவை கட்சி தான் எடுக்கும் என்றும், அப்படி போட்டியிட்டால் அதுவே தனக்கு இறுதி தேர்தலாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.


    மேலும் திருவனந்தபுரம் தொகுதியில பிரதமர் மோடி போட்டியிட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, என்னை எதிர்த்து மோடி போட்டியிட்டாலும் நானே வெற்றி பெறுவேன். என்னை மாற்றுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது என்று கூறினார்.

    • பயனர்களின் தரவுகள் மீது தாக்குதல் நடப்பதாக ஆப்பிள், குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது
    • இதே போன்ற குற்றச்சாட்டு முன்னர் பொய் என தெரிய வந்தது என அமைச்சர் கூறினார்

    இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் மற்றும் பவன் கேரா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா ஆகியோர் தங்களின் ஐபோனுக்கு ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வந்ததாக ஒரு குறுஞ்செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    அந்த செய்தியில், "அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படும் ஹேக்கர்கள் சிலரால் உங்கள் ஐபோனில் உள்ள தனிப்பட்ட தகவல் பரிமாற்ற தரவுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது. இந்த தகவலை அலட்சியப்படுத்த வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை வெளியிட்ட அந்த எம்.பி.க்கள், ஆளும் பா.ஜ.க. அரசு தங்களை வேவு பார்க்க முயல்வதாக குற்றம் சாட்டினர்.

    அவர்கள் குற்றச்சாட்டை உறுதி செய்யும் விதமாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது கட்சி அலுவலகத்தில் பலருக்கு இவ்வாறு மின்னஞ்சல் வந்துள்ளதாகவும், இதன் மூலம், ஆளும் பா.ஜ.க. அரசு அதானி விவகாரம் உட்பட பல விவகாரங்களில் இருந்து மக்களை திசை திருப்பும் அரசியலில் ஈடுபடுவதாகவும் கூறினார்.

    இந்நிலையில், ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. தெளிவில்லாமல் இருக்கும் அதன் அறிக்கையில் இந்த தகவல் உண்மையா பொய்யா என்பதை அந்நிறுவனம் உறுதிபடுத்தவோ மறுக்கவோ இல்லை.

    இதற்கிடையே மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

    இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக பார்க்கிறது. நடந்தது என்ன என்பது முழுவதுமாக ஆராயப்படும். தாங்கள் ஆட்சியில் இருந்த போது தங்கள் குடும்ப முன்னேற்றத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்பட்ட சிலருக்கு நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாது. அவர்கள் அனைத்தையும் விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுமார் 150 நாடுகளில் உள்ள பயனர்களுக்கு ஆப்பிள் இத்தகைய குறுஞ்செய்தியும், மின்னஞ்சலும் அனுப்பியுள்ளது. ஆனால், நடந்தது என்ன என்பது குறித்து அந்நிறுவனமே தெளிவான விளக்கத்தை இதுவரை தரவில்லை. முன்னர் ஒரு முறை இதே போன்ற ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு நீதிமன்ற மேற்பார்வையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இறுதியில் அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என தெரிய வந்தது.

    இவ்வாறு அஸ்வினி கூறினார்.

    • இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து நல்லதோர் உரையாடல் மேற்கொண்டோம் என கூறியிருந்தார்.
    • பதிவை பார்த்த நெட்டிசன் பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். உலகில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிடுவார்.

    இந்நிலையில் சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தருடன் 'செல்பி' புகைப்படம் எடுத்துக் கொண்டதை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பான அவரது பதிவில், துபாய் வழியாக டெல்லிக்கு திரும்பினேன். அப்போது ஆச்சரியம் அளிக்கும் வகையில் சோயிப் அக்தர் என்னை சந்தித்து 'ஹலோ' என்று கூறியதும் ஆனந்தமும், ஆச்சரியமும் அடைந்தேன். வேகப்பந்து வீச்சில் ஸ்மார்ட்டான, அதே நேரத்தில் ஊக்கமளிக்கும் மனிதர் அவர். அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். என்னை வாழ்த்த வந்த இந்தியர்கள் அனைவரும் அவருடன் செல்பி புகைப்படம் எடுக்க விரும்பினர். இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து நல்லதோர் உரையாடல் மேற்கொண்டோம் என கூறியிருந்தார்.

    இந்த பதிவை பார்த்த நெட்டிசன் பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். அதில் சிலர், சோயிப் அக்தர் மற்றும் சசிதரூர் ஆகியோரை பார்க்க ஒன்றுபோல் இருப்பதாகவும், இருவரின் முகம், ஹேர்ஸ்டைல் உள்ளிட்டவை ஒன்று போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    • டெல்லியில் நேற்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சசிதரூர் செங்கோலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு விடுதலை பெற்றபோது ஆட்சிமாற்றத்தின் அடையாளமாக இது வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் இதை காங்கிரஸ் நிராகரித்து உள்ளது.

    இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்து உள்ளது. எனினும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சசிதரூர் செங்கோலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'செங்கோல் சர்ச்சையில் இரு தரப்பும் நல்ல வாதங்கள் எடுத்து வைக்கின்றன என்பது எனது சொந்த கருத்து. இந்த பிரச்சினை சமரசத்துக்குரியதுதான். ஏனெனில் நமது நிகழ்காலத்தின் மதிப்பீடுகளை உறுதிப்படுத்த கடந்த காலத்திலிருந்து இந்த சின்னத்தை (செங்கோல்) தழுவிக்கொள்வோம்' என குறிப்பிட்டு இருந்தார்.

    • திருவனந்தபுரத்தை சேர்ந்த தனது சக ஊழியரின் மகனுக்கு ஒரு சடங்கு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
    • பொதுவாக விஜயதசமி அன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.

    திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் தனது சக ஊழியரான பிரகாஷ் என்பவரின் 2½ வயது மகனுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சியான வித்யாரம்பம் நடத்திய வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

    அதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த தனது சக ஊழியரின் மகனுக்கு ஒரு சடங்கு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். வித்யாரம்பம் சடங்கின்படி ஒரு குழந்தை தனது முதல் எழுத்துக்களை ஒரு தட்டில் அரிசியை நிரப்பி அதில் எழுத தொடங்கும். ஆசிரியர்கள், அறிஞர்கள் போன்றோர் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார்கள்.

    பொதுவாக விஜயதசமி அன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இருப்பினும் ஒவ்வொரு நாளும் கற்றல் நடத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை நடத்தியதாக சசிதரூர் குறிப்பிட்டுள்ளார்.

    வீடியோவில் சசிதரூரின் மடியில் அமர்ந்திருக்கும் சிறுவன் அனந்த பத்மநாபனுக்கு அவரது விரலால் ஓம் ஹரி ஸ்ரீ என்பதை எழுத வைப்பதுபோல் காட்சி உள்ளது.

    • நகரங்களின் பெயர் மாற்றம், உண்மையில் என்ன சாதித்தது.
    • ராஜ்பாத் (ராஜபாதை) என்பதே ஒரு இந்தி வார்த்தைதான்.

    புதுடெல்லி :

    டெல்லியில் நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பங்கேற்றார். அப்போது இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக பல இடங்களுக்கு பெயர் மாற்றப்பட்டு இருப்பது குறித்து அவர் பேசினார்.

    அவர் கூறும்போது, 'ஆங்கிலேயர்களின் தெளிவற்ற பெயர்களைக் கொண்ட இடங்களின் பெயரை மாற்றுவதையும், அதற்கு பதிலாக இந்தியர்களின் பெயரை சூட்டி கவுரவப்படுத்துவதையும் நான் ஆதரிக்கிறேன். ஆனால் பம்பாய், மெட்ராஸ் மற்றும் கல்கத்தா போன்ற நகரங்களின் பெயர் மாற்றம், உண்மையில் என்ன சாதித்தது என்று எனக்கு தெரியவில்லை' என கூறினார்.

    டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதையை, கடமைப்பாதை என பெயர் மாற்றியது குறித்து சசிதரூர் கூறுகையில், 'இது வெறும் அரசியல். அதற்கு மேல் எதுவும் இல்லை. ஏனெனில் ராஜ்பாத் (ராஜபாதை) என்பதே ஒரு இந்தி வார்த்தைதான். இதுபோன்ற விஷயங்கள் குறித்து பரவலாக விவாதிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

    • மணிப்பூரில் நடந்த கலவரத்தில் இதுவரை 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு, 53 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள மெய்டீஸ் இனத்தவர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிராக பழங்குடி மாணவர்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

    கடந்த 3-ம் தேதியன்று மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தினர். அப்போது அவர்களுக்கும், மெய்டீஸ் இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. வீடுகள், வாகனங்கள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

    ராணுவமும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டனர். மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டது. மணிப்பூரில் இதுவரை நடந்த கலவரங்களில் 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    ×