இந்தியா

'பத்மஸ்ரீ விருது' பெற்றவர் தற்போது 'தினக்கூலி' - யார் இந்த மொகிலையா?

Published On 2024-05-03 13:39 IST   |   Update On 2024-05-03 15:27:00 IST
  • அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்பட்ட ரூ.10,000 சமீபத்தில் நிறுத்தப்பட்டது.
  • நடிகர் பவன் கல்யாணின் 'பீமலா நாயக்'கின் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மொகிலையா புகழ்பெற்றார்.

தெலுங்கானாவை சேர்ந்தவர் தர்ஷனம் மொகிலையா. இவர் கின்னரா என்ற பழங்குடி இசைக்கருவியை இசைக்கும் கலைஞர்களில் எஞ்சியிருப்பவர். கின்னேரா என்பது வீணை போன்ற ஒரு சரம் கொண்ட கருவியாகும்.

அரிய இசைக்கருவியான 'கின்னரா'வை புதுப்பித்ததற்காக, தர்ஷனம் மொகிலையாவுக்கு 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதையடுத்து அப்போதைய முதல்-மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்த தர்ஷன் மொகிலையாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஐதராபாத்தில் அரசு சார்பில் ஒரு வீட்டு மனை ஒதுக்குவதாகவும், அதன் கட்டுமானம் மற்றும் இதர செலவுகளுக்காக 1 கோடி ரூபாய் வழங்குவதாகவும் முதல்-மந்திரி தெரிவித்தார்.

இந்நிலையில், நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற தர்ஷன் மொகிலையாவின் தற்போதைய நிலை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஐதராபாத் அருகே துர்க்காயமஞ்சலில் உள்ள கட்டுமான தளத்தில் மொகிலையா வேலை பார்த்து வருகிறார். இதுகுறித்து மொகிலையா கூறும் போது, "எனது மகன்களில் ஒருவன் வலிப்பு நோயால் அவதிப்படுகிறான். எனக்கும், என் மகனுக்கும் மருந்துக்கு மட்டும் மாதம் 7,000 ரூபாய் தேவைப்படுகிறது. பிறகு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் இதர செலவுகள் உள்ளன. அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்பட்ட ரூ.10,000 சமீபத்தில் நிறுத்தப்பட்டது. ஏன் நிறுத்தப்பட்டது என்று தெரியவில்லை. இதுகுறித்து கேட்ட போது, அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை என்றார்.

மேலும் ரூ.1 கோடி மானியத்துடன் ராங்காரெட்டி மாவட்டத்தில் 600 சதுர அடி கொண்ட இடத்தை ஒதுக்குவதாக அரசு கூறியது. ஆனால் அந்த ஒதுக்கீடு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்றார்.

முன்னதாக, நடிகர் பவன் கல்யாணின் 'பீமலா நாயக்'கின் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மொகிலையா புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News