இந்தியா

பா.ஜனதா 370-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்: பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

Published On 2024-02-06 01:39 GMT   |   Update On 2024-02-06 01:39 GMT
  • காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமலாக்கத்துறை 5 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை மட்டுமே பறிமுதல் செய்தது.
  • எங்களுடைய ஆட்சிக் காலத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளோம்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் மோடி நேற்று பாராளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் ஏழைகளுக்க 4 கோடி வீடுகள் கட்டி கொடுத்தோம். நகர்ப்புற ஏழைகளுக்கு 80 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். காங்கிரஸின் வேகத்தில் இந்த வீடுகள் கட்டப்பட்டிருந்தால், 100 வருடங்கள் ஆகியிருக்கும். ஐந்து தலைமுறையினர் இதை கடந்து சென்றிருப்பார்கள்.

பகவான் ராமர் வீட்டிற்கு மட்டுமல்ல, இவ்வளவு பெரிய பிரமாண்ட கோவிலுக்கும் திரும்பியுள்ளார். இந்த முறை 400 இடங்களுக்கு அதிகமாக பா.ஜனதா கூட்டணி கைப்பற்றும். மல்லிகார்ஜூன கார்கே கூட இதை கூறியிருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி மட்டும் 400 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என்பதில்லை. பா.ஜனதா தனியாக 370 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும்.

விசாரணை அமைப்புகள் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் அதன்மீது கோபம் கொள்கிறார்கள். 10 வருடத்திற்கு முன் நமது பாராளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இன்று தற்போது ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது, சிலர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் விசாரணை அமைப்புகள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டன.

நீங்கள் (ஊழல் வழக்கில் சிக்கியுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள்) ஊழல் செய்த பணத்தை நாட்டிற்கு திருப்பி தர வேண்டும். நாட்டை கொள்ளையடிக்க நான் அனுமதிக்கமாட்டேன்.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாங்கள் முன்பை விட இரண்டு மடங்கு வழக்குகளை பதிவு செய்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமலாக்கத்துறை 5 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை மட்டுமே பறிமுதல் செய்தது. எங்களுடைய ஆட்சிக் காலத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளோம்.

இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags:    

Similar News