பாஜக வென்றால் மோடியே 5 ஆண்டுகள் பிரதமராக இருப்பார்: கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதிலடி
- இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று கேட்கிறார்கள்.
- பா.ஜ.க. கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று நான் கேட்கிறேன்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ந்தேதி வரை நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமினை நேற்று சுப்ரீம் கோர்ட் வழங்கியது.
இதையடுத்து ஜெயிலில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால் இன்று கன்னாட் பிளேசில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருடன் மனைவி சுனிதா, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் உடன் இருந்தனர்.
அதை தொடர்ந்து ஆம் ஆத்மி அலுவலகத்தில் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, 'பாஜக கட்சி விதிப்படி 75 வயதைப் பூர்த்தி செய்த ஒருவர், அக்கட்சியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அப்படி இருக்க மோடி 75 வயதை அடைய இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில், யாரை முன்னிறுத்தி ஓட்டு கேட்கிறது பாஜக? அமித்ஷாவைப் பிரதமர் ஆக்க ஓட்டு கேட்கிறார்களா?
இந்தியா கூட்டணிக்கு யார் பிரதமர் என பாஜகவைச் சேர்ந்தவர்கள் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்கிறேன், உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்?"
பிரதமர் மோடி விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெற உள்ளார். மோடி ஓய்வு பெற்றார் அவரது உத்தரவாதத்தை பூர்த்தி செய்யப்போவது யார்?" என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்துள்ளார்.
"75 வயதை பூர்த்தி அடைந்தவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எந்த விதிமுறையும் பாஜகவில் இல்லை. ஆகவே பாஜக வென்றால் மோடியே 5 ஆண்டுகள் பிரதமர் பதவியில் நீடிப்பார்" என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.