இந்தியா
சோனியா காந்தி

அதிருப்தி தலைவர்கள் போர்க்கொடி- சோனியா காந்திக்கு எதிர்ப்பு வலுக்கிறது

Published On 2022-03-17 05:18 GMT   |   Update On 2022-03-17 05:18 GMT
காங்கிரஸ் தலைமை பொறுப்பில் இருந்து சோனியா குடும்பம் விலகி மற்றொருவர் தலைமை ஏற்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கபில்சிபல் கருத்துக்கு கட்சியில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி:

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை தழுவியது.

குறிப்பாக உத்தரபிரதேசத் தில் 403 தொகுதிகளில் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 2 சதவீதம் ஓட்டுகளே கிடைத்துள்ளன.

இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சலசலப்பு உருவாகி இருக்கிறது. ஏற்கனவே 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை தழுவியது.

அப்போது குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட 23 தலைவர்கள் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று 5 மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சோனியா உத்தரவிட்டதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சுஜேவாலா தெரிவித்தார்.

இதையடுத்து கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரீஷ்ராயா, உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால் ஆகியோர் நேற்று முன்தினம் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைமை பொறுப்பில் இருந்து சோனியா குடும்பத்தினர் விலக வேண்டும் என்று கபில்சிபல் உள்ளிட்ட காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் 23 பேர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இவர்கள் ஜி-23 தலைவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் இந்த 23 தலைவர்களின் கூட்டம் டெல்லியில் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் இல்லத்தில் நேற்று இரவு நடைபெற்றது. சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, கபில்சிபல், பூபிந்தர் சிங் ஹூடோ, பிருத்விராஜ் சவான், மணிஷ்திவாரி, சசிதரூர், விவேக் தன்கா, ராஜ்பப்பர், அகிலேஷ் பிரசாத்சிங், சந்தீப் தீக்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் 5 மாநில தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விவாதித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கட்சியை முழுவதுமாக மறுசீரமைப்பு செய்யவும், சோனியா குடும்பத்தினர் இல்லாத தலைமையை உருவாக்கவும் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

பின்னர் 23 தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அனைத்து நிலைகளிலும் முடிவு எடுக்கக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய கூட்டு தலைமையை உருவாக்குவது மட்டுமே காங்கிரஸ் கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஒரே வழி என்று நாங்கள் நம்புகிறோம்.

பா.ஜனதாவை எதிர்க்க வேண்டும் என்றால் காங்கிரசை வலுப்படுத்தியாக வேண்டும். வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக நம்பிக்கைக்குரிய மாற்றை உருவாக்க வேண்டும் என்றால் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாட்டியாலா எம்.பி. பிரணீத்கவுர், குஜராத் முன்னாள் முதல்- மந்திரி சங்கர்சிங் வகேலா, முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர், அரியானா முன்னாள் சபாநாயகர் குல்தீப்சர்மா ஆகியோரும் ஜி-23 குழுவில் இணைந்துள்ளனர். இதனால் அந்த குழுவின் பலம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த 13-ந்தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு பிறகு தான் கட்சியின் அமைப்பு ரீதியாக சீர்திருத்தம் கோரி வரும் ஜி-23 தலைவர்கள் குழுவைச் சேர்ந்த கபில்சிபல் கட்சி தலைமை பொறுப்பில் இருந்து காந்தி குடும்பத்தினர் விலகி இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். அவரது கருத்து கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனாலும் சோனியா தலைமை மீது நம்பிக்கை வைத்திருப்பதாக ஜி-23 குழுவைச் சேர்ந்த ஆனந்த் சர்மா, குலாம்நபி ஆசாத்தும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஜி-23 குழு தலைவர்கள் கூட்டத்துக்கு பிறகு சோனியாகாந்தியை தொடர்பு கொண்டு பேசிய குலாம்நபி ஆசாத் கட்சியை வலுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே ஜி-23 குழு தலைவர்கள் கூட்டம் கட்சியை பிளவுப்படுத்தும் வகையில் இருப்பதாக சோனியாவின் தீவிர ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஆனாலும் கட்சியை பிளவுப்படுத்தும் நோக்கில் ஜி-23 தலைவர்கள் தனியாக சந்தித்து பேசி வருகிறார்கள். இவர்கள் 100 கூட்டங்களை நடத்தினாலும் சோனியாவை பலவீனப்படுத்த முடியாது. கட்சி அவருக்கு ஆதரவாக உள்ளது” என்றார்.

காங்கிரஸ் தலைமை பொறுப்பில் இருந்து சோனியா குடும்பம் விலகி மற்றொருவர் தலைமை ஏற்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கபில்சிபல் கருத்துக்கும் கட்சியில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் கபில்சிபல் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு சோனியாவிடம் கோரிக்கை விடுத்து டெல்லி சாந்தினிசவுக் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஜி-23 தலைவர்கள் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News