இந்தியா
குமாரசாமி

ஆட்சிக்கு வருவதை தடுக்க எங்கள் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் சதி: குமாரசாமி குற்றச்சாட்டு

Published On 2021-12-11 02:57 GMT   |   Update On 2021-12-11 02:57 GMT
ஆட்சிக்கு வருவதை தடுக்க எங்கள் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் சதி செய்வதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சன்னபட்டணாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மேல்-சபை தேர்தலில் பா.ஜனதாவுடன் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி வைத்து கொண்டதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். கூட்டணி குறித்து முடிவு எடுக்க உள்ளூர் நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கினோம். வருகிற சட்டசபை தேர்தலில் 123 தொகுதிகளில் வெற்றி பெறுவது எங்களின் இலக்கு. அதை மனதில் வைத்து நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை.

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடாத தொகுதிகளில் பா.ஜனதாவை ஆதரிக்குமாறு எடியூரப்பா கேட்டார். அவர் தனது அரசியல் அனுபவத்தை ஏற்றபடி பகிரங்கமாகவே ஆதரவு கேட்டார். அது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. சில தொகுதிகளில் எங்கள் கட்சி பகிரங்கமாகவே காங்கிரசை ஆதரித்தது. எங்கள் கட்சியின் நிர்வாகிகள் சிலர் காங்கிரஸ் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டனர். அதை கூட அக்கட்சி தலைவர்கள் மதிக்கவில்லை. நன்றி இல்லாத கட்சி என்றால் அது காங்கிரஸ் தான்.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ளது. அப்போது எந்த கட்சி ஏமாற்றம் அடையப்போகிறது என்பது தெரியவரும். அப்போது என்ன நடக்கிறது என்பதை இப்போதே கணித்து கூற முடியாது. ஆனாலும் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏமாற்றமும், பேராசையும் இயல்பிலேயே இருக்கும் குணம். தன்னை பிரதமர் ஆக்குங்கள் என்று காங்கிரசிடம் தேவகவுடா கேட்கவில்லை.

அதே போல் காங்கிரசிடம் சென்று எனக்கு முதல்-மந்திரி பதவி தாருங்கள் என்று நானும் கேட்கவில்லை. அவர்களாகவே எங்கள் வீட்டிற்கு வந்து முதல்-மந்திரி பதவியை ஏற்குமாறு கூறினர். அவர்கள் ஆதரவு வழங்குவது போல் வழங்கி கழுத்தை அறுத்தனர். இது அக்கட்சியின் மிக மோசமான கலாசாரம். கர்நாடகத்தில் எங்கள் கட்சி பலமடைந்துள்ளது. அதனால் ஆட்சிக்கு வருவதை தடுக்க எங்கள் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் சதி செய்கிறார்கள். ராமநகரில் எங்கள் கட்சி நிர்வாகிகள் பலரை காங்கிரசார் இழுத்து கொண்டனர். இதை பற்றி நான் கவலைப்படவில்லை. விசுவாசமிக்க தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News