செய்திகள்
ஒவைசி

மோடியின் ஈகோவை திருப்திப்படுத்தவே வேளாண் சட்டங்கள் உருவாக்கம்: அசாதுதீன் ஒவைசி

Published On 2021-11-19 10:20 GMT   |   Update On 2021-11-19 10:20 GMT
கருப்பு சட்டத்தினால் 700 விவசாயிகள் தங்களது உயிரை இழந்துள்ளனர் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

வேளாண் சட்டங்களின் பயன்களை ஒரு தரப்பினருக்கு புரிய வைக்க முடியவில்லை என்றும், விவசாயிகள் நலன் முக்கியம் எனவும் தெரிவித்தார்.

மோடி அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பாராட்டுவதற்கு முன் விமர்சனத்தையும் முன் வைக்கின்றனர்.

அந்த வகையில் எ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி தனது கருத்தை தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது குறித்து அசாதுதீன் கூறியிருப்பதாவது:

முதல் நாளில் இருந்தே மூன்று வேளாண் சட்டங்களும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று எதிர்கட்சிகள் சொல்லிக்கொண்டு வந்தன. மோடி அரசு இதுபோன்ற சட்டங்களை உருவாக்க, மோடி அரசுக்கு அரசியலமைப்பு உரிமை இல்லை. மோடியின் ஈகோவை திருப்தி படுத்தவே இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த கருப்பு வேளாண் சட்டங்களால் 700 விவசாயிகள் தங்களது உயிர்களை இழந்துள்ளனர்.

மோடி தனது ஈகோவை ஒதுக்கி வைத்திருந்தால், இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்காது. விவசாயிகள் உயிர் இழந்திருக்கமாட்டார்கள். இது மிகவும் காலதாமதமான முடிவு. பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும்போது இந்த அரசு பயப்படும் என்று நான் எப்போதுமே கூறுவேன். இந்த வெற்றி அனைத்து விவசாயிகளுக்கும் உடையதாகும்.

இவ்வாறு ஒவைசி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News