செய்திகள்
அரசு மரியாதையை ஏற்றுக்கொண்டார் முக ஸ்டாலின்

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மரியாதை

Published On 2021-06-17 09:31 GMT   |   Update On 2021-06-17 09:31 GMT
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி ஓடிஐஎஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் அறிவாலயம் கட்டிடப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.
புதுடெல்லி:

தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர் முதல் முறையாக இன்று டெல்லி சென்றுள்ளார். தனி விமானம் மூலம் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் நேராக அவர் டெல்லி ஓடிஐஎஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் அறிவாலயம் கட்டிடப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். அவருக்குக் கட்டிடம் உருவாகும் விதம், அதன் மாதிரிகள் போட்டுக்காட்டப்பட்டு விளக்கப்பட்டது.

பின்னர் நேராக டெல்லி வரும் முதல்வர்கள் தங்கும் தமிழக இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கு அவரைத் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் கார்டு ஆஃப் ஹானர் எனப்படும் டெல்லி பட்டாலியன் போலீசார் அரசு மரியாதை அளித்தனர். அதனை மு.க.ஸ்டாலின் ஏற்று கொண்டார். பின்னர் திமுக எம்.பி.க்கள் வரவேற்றனர்.

அங்கு ஓய்வெடுக்கும் அவரை டெல்லியின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்தனர். மதிய உணவுக்குப் பின் ஓய்வெடுக்கும் அவர், திமுகவின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் சரியாக மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு பிரதமர் இல்லத்துக்குச் செல்கிறார்.

அவருடன் அமைச்சர் துரைமுருகன், மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத்தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் செல்வர் எனத் தெரிகிறது. பிரதமரைச் சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்குகிறார். அதற்கான கோரிக்கை மனுவையும் அளிக்கிறார். பின்னர் தமிழக இல்லம் திரும்புகிறார்.
Tags:    

Similar News