செய்திகள்
மன்மோகன் சிங்

மதம், கலாச்சாரம் மற்றும் மொழி அடிப்படையில் சமூகம் பிரிக்கப்படுகிறது- மன்மோகன் சிங்

Published On 2021-03-27 02:31 GMT   |   Update On 2021-03-27 02:31 GMT
இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளை உறுதி செய்யும் அரசாங்கத்திற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

அசாமில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 47 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-  அசாம் மாநிலம் எனது 2-வது வீடு ஆகும். 28 ஆண்டுகள் நான் இந்த மாநிலத்தில் இருந்துதான் ராஜ்யசபாவுக்கு தேர்வு ஆனேன்.  5 ஆண்டுகள் நிதியமைச்சராகவும் 10 ஆண்டுகள் பிரதமராகவும் நான் பணியாற்ற அசாம் மக்கள் எனக்கு வாய்ப்பு வழங்கினர்.

அசாமில் நீண்ட காலமாக பயங்கரவாத பிரச்சினை நீடித்து வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் 2001-2016 ஆட்சிக் காலத்தில் அசாமில் புதிய அத்தியாயம் தொடங்கியது. மாநிலம் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்தது.

ஆனால் இப்போது மதம், இனம், மொழிரீதியாக மக்களிடையே பிரிவினை தூண்டப்படுகிறது. மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பதற்றமும் பயமும் வியாபித்து பரவியுள்ளது. அவசரகதியில் அமல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையாலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையாலும் நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். சமையல் கேஸ், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.இந்த நேரத்தில் அசாமின் அமைதி, வளர்ச்சியை முன்னிறுத்தி  சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களிக்க வேண்டுகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News