செய்திகள்
சித்தராமையா

விவசாயிகளை பயங்கரவாதிகளை போல் மத்திய அரசு சித்தரிக்கிறது: சித்தராமையா

Published On 2020-12-03 02:05 GMT   |   Update On 2020-12-03 02:05 GMT
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பயங்கரவாதிகளை போல் சித்தரிப்பதாக மத்திய அரசு மீது சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு ;

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை அரசு அழைத்து உரிய மரியாதை கொடுத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நேர்மையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய மோடி அரசு, பெயருக்கு பேச்சு நடத்தியுள்ளது. இது மத்திய அரசின் பொறுப்பற்ற மற்றும் நேர்மையற்ற போக்கை வெளிக்காட்டுவதாக உள்ளது. ஒருபுறம் விவசாயிகளுடன் தீவிரமாக பேச்சு நடத்தவில்லை. 

இன்னொருபுறம் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பயங்கரவாதிகளை போல் மத்திய அரசு சித்தரிக்கிறது. இது சீக்கியர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தேச விவசாயிகளையும் அவமானப்படுத்தும் செயல் ஆகும். ஆதிதிராவிடர்கள், மனித உரிமையாளர்களுக்கு ஆதரவாக போராடுகிறவர்களை நக்சலைட்டுகள் என்றும், மதவாதத்திற்கு எதிராக போராடுகிறவர்களை தேசத்துரோகிகள் என்றும் முத்திரை குத்தும் மத்திய அரசு, இப்போது வயிற்றுக்கு உணவு கொடுக்கும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லும் அளவுக்கு தரம் கெட்ட நிலைக்கு இறங்கியுள்ளது.

காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்கிவிட்டோம் என்று கூறி வரும் பா.ஜனதாவினர் இப்போது விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ் இருப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ் இல்லை. ஆனால் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறது. விவசாயிகளின் பொறுமையை சோதிக்காமல், விவசாயிகளுக்கு எதிரான 3 கருப்பு சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அரசு அலட்சியம் காட்டினால் விவசாயிகள் பொங்கி எழுவார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பிரதமர் மோடியே பொறுப்பாவார்.

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News