புதுச்சேரி

கணவருக்கு வாங்கிக்கொடுத்த ரூ.47,000 செல்போன் திருட்டு - மீட்டு கொடுத்த போலீசாருக்கு நரிக்குறவ பெண் பாராட்டு

Published On 2024-05-10 07:38 GMT   |   Update On 2024-05-10 07:38 GMT
  • செல்போன்களை அவற்றின் ஐ.பி. முகவரி மற்றும் ஐ.எம்.இ.ஐ எண்கள் மூலம் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
  • போலீசார் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட இடங்களில் முகாமிட்டு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 25 செல்போன்களை மீட்டனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி வில்லியனூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக செல்போன்கள் திருடுபோவது அதிகரித்துள்ளது. செல்போன்களை பறிகொடுத்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வில்லியனூர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதில் அந்த பகுதியை சேர்ந்த வளர்மதி என்ற நரிகுறவ பெண்ணும் செல்போன் திருடு குறித்து புகார் செய்திருந்தார். தனது கணவருக்கு ஆசையாக தவணை முறையில் வாங்கிய செல்போன் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் கடை வைத்திருந்த போது திருடு போனதாக புகாரில் கூறியிருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சைபர் கிரைம் பிரிவு போலீசார் உதவியுடன் காணாமல் போன செல்போன்களை அவற்றின் ஐ.பி. முகவரி மற்றும் ஐ.எம்.இ.ஐ எண்கள் மூலம் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களிலும் கேரளாவிலும் திருடு போன செல்போன்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.

இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட இடங்களில் முகாமிட்டு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 25 செல்போன்களை மீட்டனர். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வில்லியனூர் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

அப்போது பொதுமக்கள் செல்போன்களை பாது காப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அஜாக்கிரதையாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறினார். காணாமல் போன செல்போனை பெற்ற நரிக்குறவர் பெண் வளர்மதி கூறியதாவது:-

ஒவ்வொரு ரூபாயாக பாசிமணி விற்ற பணத்தை கொண்டு தவணை முறையில் ரூ.47 ஆயிரம் மதிப்பில் ஆசையாக கணவருக்கு வாங்கி கொடுத்த செல்போன் தொலைந்தது. இதனால் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

அதனை குறுகிய நாட்களில் போலீசார் கண்டுபிடித்து கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறி போலீசாருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். 

Tags:    

Similar News