செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை - வாரணாசிக்கு சுற்றுலா ரெயில் இயக்கம்

Published On 2020-10-29 22:31 GMT   |   Update On 2020-10-29 22:31 GMT
தீபாவளி தினத்தன்று கங்கையில் நீராடுவதற்கு வசதியாக ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் நெல்லையில் இருந்து வாரணாசிக்கு வருகிற 11-ந்தேதி சுற்றுலா ரெயில் புறப்படுகிறது.
புதுடெல்லி:

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) பாரத தரிசன சுற்றுலா ரெயில் மூலம் இதுவரை 370-க்கும் மேற்பட்ட யாத்திரைகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் இந்த ரெயில் ‘தீபாவளி கங்கா ஸ்நான ரெயில்’ என்ற பெயரில் நெல்லையில் இருந்து அடுத்த மாதம் (நவம்பர்) 11-ந் தேதி புறப்படுகிறது. மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக தமிழகத்தை கடந்து செல்லும் இந்த ரெயில், முதலில் கயாவுக்கு செல்கிறது.

அங்கு, பல்குனி நதியில் பயணிகள் நீராடவும், விஷ்ணு பாத கோவிலில் முன்னோருக்கான காரியங்களை செய்யவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. பின்னர் தீபாவளியன்று (நவம்பர் 14-ந்தேதி) வாரணாசியில் கங்கையில் ‘ஸ்நானம்’ செய்து, காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் அன்னபூரணி தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் பிரயாக்ராஜ்ஜில் (அலகாபாத்) கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் நீராடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஆன்மிக சுற்றுலா 8 நாட்கள் கொண்டது. இதற்கு கட்டணம் ரூ.7,575 ஆகும். ரெயிலில் படுக்கை வசதி, சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்கும் வாகன வசதி ஆகியவை இந்த பயணக்கட்டணத்தில் அடங்கும்.

இதுபற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ள 90031 40680 மற்றும் 98409 48484 ஆகிய எண்களில் சென்னை அலுவலகத்தையோ, அல்லது 82879 31977 என்ற எண்ணில் மதுரை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி.யின் சுற்றுலா முதுநிலை செயல் அதிகாரி மாலதி ரத்தினம் கூறியுள்ளார்.

Tags:    

Similar News