செய்திகள்
சித்தராமையா

கொரோனா மரண தகவல்களை மூடிமறைக்கும் கர்நாடக அரசு: சித்தராமையா குற்றச்சாட்டு

Published On 2020-10-01 02:28 GMT   |   Update On 2020-10-01 02:28 GMT
கொரோனா குறித்த தகவல்களை சரியான முறையில் வழங்காமல், அரசு மூடி மறைக்க முயற்சி செய்கிறது?. மரணம் குறித்த தகவல்களை மறைப்பது என்பது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு :

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா மரணங்கள் தொடர்பாக அரசு வழங்கும் தகவல்கள் முரண்பாடாக உள்ளது. கோலாரில் உள்ள ஜாலப்பா மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 19-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 4 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்துள்ளனர். ஆனால் இது அன்றைய சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பில் இடம் பெறவில்லை. மேலும் அதே மருத்துவமனையில் மறுநாள் ஒரு இறப்பு நடந்துள்ளது. அதுகுறித்தும் சுகாதாரத்துறையின் தகவலில் இடம் பெறவில்லை.

கொரோனா குறித்த தகவல்களை சரியான முறையில் வழங்காமல், அரசு மூடி மறைக்க முயற்சி செய்கிறது?. இது உங்களின் தோல்வியா?. மரணம் குறித்த தகவல்களை மறைப்பது என்பது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். கொரோனாவை எதிர்கொள்ள தயாராவது மற்றும் மக்களின் நடத்தை போன்றவற்றில் சிக்கல் ஏற்படும். பா.ஜனதா அரசு தனது தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியத்தை மூடிமறைக்க முயற்சி மேற்கொள்கிறது. இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை இருக்க வேண்டும்.

உத்தரபிரதேசத்தில் தலித் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு உள்ள யோகி ஆதித்யநாத் அரசு, தவறு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த பெண்ணின் உடலை பார்க்க கூட பெற்றோருக்கு அனுமதி வழங்கவில்லை. பா.ஜனதா ஆட்சியில் இத்தகைய கொடூர சம்பவங்கள் அரசின் உதவியுடன் நடைபெறுவது அதிகரித்துள்ளது. ராமர் கூட இத்தகைய பா.ஜனதா ராவணன்களை மன்னித்திருக்க மாட்டார்.

பா.ஜனதா ஆட்சியில் தலித் மக்கள் மீதான அத்துமீறல்கள், பல மடங்கு அதிகரித்துவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதலுக்கு எதிராக போராட வேண்டியது அவசியம். உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News