செய்திகள்
மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத்

பெங்களூருவில் 10 நாட்களுக்கு ஒருமுறை வீடு, வீடாக ஆய்வு: மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தகவல்

Published On 2020-08-05 02:57 GMT   |   Update On 2020-08-05 02:57 GMT
பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க 10 நாட்களுக்கு ஒரு முறை வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறியுள்ளார்.
பெங்களூரு :

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்களுடன் கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூருவில் தினமும் சராசரியாக 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சாவு எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படியும், இதற்காக தனிக்குழுவை அமைக்கும்படியும் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார். அதன்படி, கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் பலியாக காரணம் என்ன? பலி எண்ணிக்கையை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன?, என்பது குறித்து அந்த குழுவினர் ஆய்வு மேற்கொள்வார்கள். பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க 10 நாட்களுக்கு ஒரு முறை வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனா அறிகுறி உள்ளிட்ட உடல் நலக்குறைவால் அவதிப்படுவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டு வாரியாக, வீடு, வீடாக சென்று மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு நடத்துவார்கள். குறிப்பாக வயதானவர்கள், ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை கண்காணிக்கப்படுவார்கள்.

இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறினார். 
Tags:    

Similar News