செய்திகள்
கொரோனாவுக்கு பலி

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 54 பேர் பலி: 2062 பேருக்கு தொற்று உறுதி

Published On 2020-07-09 03:02 GMT   |   Update On 2020-07-09 03:02 GMT
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 54 பேர் பலியானார்கள். 2,062 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.
பெங்களூரு:

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

தேசிய அளவில் இதுவரை 7 லட்சத்து 42 ஆயிரத்து 417 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதில் நேற்று வரை 20 ஆயிரத்து 642 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதே போல் குணம் அடைவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளன. அந்த மாநிலங்களின் வரிசையில் தற்போது கர்நாடகமும் இடம் பிடித்துள்ளது. இங்கு கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் 1,498 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கு முந்தைய சில நாட்களின் பாதிப்பைவிட சற்று குறைந்தது. இதனால் சுகாதாரத்துறையினர் சற்று ஆறுதல் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று இதுவரை இல்லாதபுதிய உச்சமாக ஒரே நாளில் 2,062 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து ஒரே நாளில் 54 பேர் பலியாகியுள்ளனர். இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் பெங்களூருவில் மட்டும் 1,148 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகரில் கொரோனா அதிகரித்து வருவதால் அதை தடுக்க முடியாமல் கர்நாடக அரசு திணறி வருகிறது. ஏனென்றால் பெங்களூருவில் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகிறவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எப்படி வைரஸ் தொற்று வந்தது என்பதே தெரியவில்லை. இது சுகாதாரத்துறைக்கு பெரிய தலைவலியாக உள்ளது. கர்நாடகத்தில் நேற்றைய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 26 ஆயிரத்து 440 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 2,062 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 11 ஆயிரத்து 876 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 778 பேர் அடங்குவர்.

புதிதாக கொரோனா பாதித்தோரில் பெங்களூரு நகரில் 1,148 பேர், தட்சிணகன்னடாவில் 183 பேர், தார்வாரில் 89 பேர், கலபுரகியில் 66 பேர், பல்லாரியில் 59 பேர், மைசூருவில் 59 பேர், பெங்களூரு புறநகரில் 37 பேர், ராமநகரில் 34 பேர், சிக்பள்ளாப்பூரில் 32 பேர், உடுப்பி, ஹாவேரியில் தலா 31 பேர், பீதரில் 29 பேர், பெலகாவியில் 27 பேர், ஹாசனில் 26 பேர், பாகல்கோட்டையில் 24 பேர், துமகூருவில் 24 பேர், சிக்கமகளூருவில் 23 பேர், மண்டியாவில் 20 பேர், உத்தரகன்னடாவில் 19 பேர், தாவணகெரேயில் 18 பேர், ராய்ச்சூர், சிவமொக்காவில் தலா 17 பேர், கோலாரில் 16 பேர், யாதகிரி, கொப்பலில் தலா 11 பேர், கதக்கில் 5 பேர், விஜயாப்புராவில் 4 பேர், சித்ரதுர்காவில் 2 பேர் உள்ளனர். சாம்ராஜ்நகர், குடகில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

கர்நாடகத்தில் நேற்று 54 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் பெங்களூருவில் 22 பேர், ராய்ச்சூரில் 3 பேர், பல்லாரியில் 4 பேர், ஹாசனில் 3 பேர், துமகூருவில் 2 பேர், சிக்பள்ளாப்பூரில் 3 பேர், மைசூருவில் 2 பேர், விஜயாப்பராவில் 2 பேர், தார்வாரில் 7 பேர், பீதரில் ஒருவர், தட்சிண கன்னடாவில் ஒருவர், கலபுரகியில் ஒருவர், ராமநகரில் 2 பேர், பெங்களூரு புறநகரில் ஒருவர் அடங்குவர். இதன் மூலம் கர்நாடகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை 7 லட்சத்து 59 ஆயிரத்து 181 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 19 ஆயிரத்து 134 மாதிரிகள் அடங்கும். 60 ஆயிரத்து 27 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தற்போது, 16 ஆயிரத்து 527 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 452 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெங்களூருவில் மட்டும் 290 பேர் உள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News