செய்திகள்
சோனியா காந்தி

லடாக் மோதல் சம்பவம் உளவுத்துறையின் தோல்வியா?- சோனியா காந்தி கேள்வி

Published On 2020-06-20 01:54 GMT   |   Update On 2020-06-20 01:54 GMT
உளவுத்துறையின் தோல்வியால் லடாக் மோதல் சம்பவம் ஏற்பட்டதா? என அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வியெழுப்பினார்.
புதுடெல்லி:

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார்.

அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொண்டார். அவர் தனது அறிமுக உரையில், சரமாரியாக கேள்விகள் விடுத்தார். அவர் பேசியதாவது:-

கடந்த மே 5-ந் தேதி முதல் ஜூன் 6-ந் தேதிவரை பொன்னான நேரத்தை மத்திய அரசு வீணாக்கி விட்டது. பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைக்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த தவறிவிட்டது. அதனால், 20 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

லடாக்கில் இந்திய பகுதியில் சீன ராணுவம் எப்போது ஊடுருவியது? அங்கு வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் நடப்பதாக வெளிநாடுகளில் உளவு பார்க்கும் இந்திய உளவு அமைப்புகள் தகவல் சொல்லவில்லையா? உளவுத்துறை தோல்வியால் இச்சம்பவம் ஏற்பட்டதா? அடுத்து என்ன செய்ய உத்தேசம்? எல்லைக்கோடு பகுதியில் ஏற்கனவே இருந்த நிலை நிலைநாட்டப்படும் என்றும், சீன ராணுவம் தனது பழைய இடத்துக்கு திரும்பிச் செல்லும் என்றும் பிரதமரிடம் நாட்டு மக்கள் உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு ஆதரவாக பேசினார். அவர் பேசியதாவது:-

சீனா, ஜனநாயக நாடு அல்ல, சர்வாதிகார நாடு. எனவே, தான் விரும்பியதை எல்லாம் செய்யும். இந்தியா, ஒன்றுபட்டுத்தான் செயலாற்ற முடியும். இந்தியா வெற்றி பெறும், சீனா தோல்வி அடையும். அதற்கு நாம் ஒற்றுமையாக பேச வேண்டும், ஒற்றுமையாக சிந்திக்க வேண்டும், ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

அனைத்துக்கட்சி கூட்டம், ஒரு நல்ல செய்தி. இந்த பிரச்சனையில், நமது படையினருக்கு பின்னால் மேற்கு வங்காள அரசு ஒன்றுபட்டு நிற்கிறது. மத்திய அரசுக்கு உறுதியான ஆதரவை அளிக்கிறது.

மேலும், தொலைத்தொடர்பு, ரெயில்வே, சிவில் விமான போக்குவரத்து போன்ற துறைகளில் சீன நிறுவனங்களை நுழைய விடாதீர்கள். இதனால் நாம் பிரச்சினைகளை சந்தித்தாலும், அவர்களை நுழைய விடக்கூடாது.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.
Tags:    

Similar News