செய்திகள்
சித்தராமையா

வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும்: எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம்

Published On 2020-05-11 02:58 GMT   |   Update On 2020-05-11 02:58 GMT
வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு :

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதவது:-

கர்நாடகத்தில் இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் காட்சிகளை பார்க்கிறோம். அதே போல் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள கன்னடர்கள், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சரியான உணவு இன்றி தவித்து வருகிறார்கள்.

பலர் சொந்த ஊருக்கு நடந்தே செல்கிறார்கள். அவர்களில் சிலர் செல்லும் வழியிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. சிலர் ரெயில் பாதையில் உறங்கியபோது, ரெயில் மோதி இறந்த சம்பவங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவ்வளவு சம்பவங்கள் நடந்தபோதிலும், மத்திய-மாநில அரசுகளுக்கு கருணை இருப்பதாக தெரியவில்லை.

வெளிமாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பவும், வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள கன்னடர்களை இங்கு அழைத்து வரவும் ரெயில் போக்குவரத்து வசதியை உடனே ஏற்படுத்த வேண்டும். அவர்களின் போக்குவரத்து செலவில் 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்பதாக கூறியுள்ளது. மீதமுள்ள 15 சதவீதத்தை மாநில அரசே ஏற்று, அந்த தொழிலாளர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

பெங்களூருவில் இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல, ரெயில் ஏறும் இடம் அருகில் உள்ள பகுதியில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பெங்களூருவில் இருந்து அந்த பகுதிக்கு செல்ல பஸ் வசதி இல்லை. அந்த பஸ் வசதியை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் அந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றடையும் வரை தேவையான உணவு வசதிகளை அரசே செய்து கொடுக்க வேண்டும்.

இந்த தொழிலாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். சேவாசிந்து இணையதள பக்கத்தில் பதிவு செய்ய, வார்டு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்களில் தனி பிரிவுகளை தொடங்க வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள கண்காணிப்பு அதிகாரிகள், தேவையான எந்திர வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்.

இனி ஒரு தொழிலாளி கூட மரணம் அடையாதவாறு அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். ரத்தம், வியர்வை சிந்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் தொழிலாளர்களை பாதுகாப்பதில் அரசு தனது பொறுப்பற்ற செயலை கைவிட வேண்டும். நிலைமையை எச்சரிக்கையாகவும், மனிதநேயத்துடனும் அணுகி சரிசெய்ய வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா அதில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News