ஏழை-நடுத்தர மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நாளை (வியாழக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி இருப்பதாக சித்தராமையா அறிவித்தார்.
நெசவாளர்கள், சவிதா சமூகம், வாடகை கார் ஓட்டுனர்கள் சங்கம், அமைப்பசாரா தொழிலாளர் சங்கம், தெருவோர வியாபாரிகள் சங்கம், கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அந்த சங்கத்தினர், தாங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளை எடுத்துக் கூறினர். இந்த கூட்டத்திற்கு பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
“கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது. இதனால் அன்றாடம் உழைத்து வாழ்க்கையை நடத்தும் கூலித்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களை சேர்ந்த அவர்கள் ஒரு வேளை உணவுக்குக்கூட கஷ்டப்படுகிறார்கள்.
இந்த உழைக்கும் மக்களுக்கு இந்திரா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்குமாறு நான் பல முறை முதல்-மந்திரிக்கு கோரிக்கை விடுத்தேன். இதற்கு ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி செலவாகும். இதை அரசு ஏற்க மறுப்பது சரியல்ல. அரசு தற்போது வழங்கும் உணவு தானிய தொகுப்பு தகுதியான அனைவரையும் போய் செரவில்லை.
அதற்காக தான் அந்த மக்களுக்கு ஒரு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். ஊரடங்கு இருப்பதால் நாங்கள் இதில் அரசியல் செய்ய விரும்பவில்லை. இந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட பிறகு நாங்கள் இந்த அரசின் தவறுகளை கண்டித்து போராட்டம் நடத்துவோம்.
அரசிடம் இருந்து தங்களுக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று அந்த மக்கள் கூறுகிறார்கள். சலூன் கடைகள் மாநிலம் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால் சவிதா சமூகத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பல்வேறு சமூகத்தினரும் நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர்.