செய்திகள்
ராம்விலாஸ் பஸ்வான்

கிருமிநாசினியை பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டுமா?- ராகுல் காந்திக்கு ராம்விலாஸ் பஸ்வான் கேள்வி

Published On 2020-04-22 05:35 GMT   |   Update On 2020-04-22 05:35 GMT
கிருமிநாசினியை பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டுமா? ஏழைகள் பயன்படுத்தக்கூடாதா? என்று ராகுல் காந்திக்கு ராம்விலாஸ் பஸ்வான் கேள்வி விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

உபரியாக உள்ள அரிசியை கிருமிநாசினி திரவம் தயாரிக்க பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ஏழைகள் பட்டினியால் வாடும்போது, அவர்களுக்காக இருக்கும் அரிசியை பணக்காரர்கள் பயன்படுத்தும் கிருமிநாசினி தயாரிக்க பயன்படுத்துவது தவறு’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அவரது விமர்சனத்துக்கு மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் பதில் அளித்துள்ளார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டில் 18 மாதங்களுக்கு போதுமான உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளது. மிகுதியாக உள்ள அரிசியைத்தான் கிருமிநாசினி தயாரிக்க பயன்படுத்துகிறோம்.

கிருமிநாசினியை பணக்காரர்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா? ஏழைகள் பயன்படுத்துவதை ராகுல் காந்தி விரும்பவில்லையா? அப்படியானால் ஏழைகள் சாக வேண்டுமா?

ஏழைகளும் வாங்கும் வகையில் கிருமிநாசினியை அதிக அளவில் தயாரிக்க வேண்டும் என்பது எங்கள் நீண்டகால திட்டம். எனவே, ராகுல் காந்தி தனது எதிர்மறை மனநிலையை கைவிட வேண்டும். அத்தகைய மனநிலை, நாட்டுக்கே ஆபத்தானது.

அதற்கு மாறாக, எங்காவது ஏழைகள் பட்டினியாக கிடந்தால், அதை ராகுல் காந்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். ஏற்கனவே, ரே‌‌ஷன் கடை பயனாளிகளுக்கு 3 மாதங்களுக்கு பொருட்கள் இலவசம் என்று அறிவித்துள்ளோம்.

யாரும் பட்டினி கிடக்கக்கூடாது என்பதுதான் அரசின் கொள்கை. எனவே, உணவு தானியங்களை உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதை உறுதி செய்வது மாநில அரசுகளின் பொறுப்பு ஆகும்.

இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

Tags:    

Similar News