செய்திகள்
சோனியா காந்தி

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்கு உதவுவோம் - சோனியாகாந்தி உறுதி

Published On 2020-04-15 02:25 GMT   |   Update On 2020-04-15 02:25 GMT
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்கு உதவுவோம் என்று சோனியா காந்தி கூறினார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று நாட்டு மக்களுக்கு தனது வீடியோ உரையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நாடு இன்று கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளது. டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் இதில் போர் வீரர்களாக செயல்பட்டு வருகிறார்கள்.

தூய்மை பணியாளர்கள், போலீசார், அரசு அதிகாரிகள் ஆகியோரும் பாதுகாப்பு உபகரணங்கள் தட்டுப்பாட்டிலும் முழுநேரமும் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள். இந்த நேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல், இந்த போரில் வெற்றி பெறுவது இயலாது.

பொதுமக்கள் ஆதரவு இல்லாவிட்டால், இந்த போர் பலவீனமடையும். அப்படி நடக்க அனுமதிக்கக் கூடாது. சில இடங்களில் டாக்டர்கள் தவறாக நடத்தப்படுவதாக கேள்விப்படுகிறேன். அது தவறு. நமது கலாசாரமும், பாரம்பரியமும் அதை அனுமதிக்காது. அவர் களை நாம் ஆதரிக்க வேண்டும்.

அதுபோல், தனிப்பட்ட முறையில் சிலர் உணவு, அத்தியாவசிய பொருட்கள், கிருமி நாசினிகளை வழங்கி வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியரும் ஒற்றுமையாக போரிட்டு, தங்கள் கடமையை செய்து வருகிறார்கள்.

இந்த போர் நடக்கும் நேரத்தில், ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் தனது பொறுப்பை உணர்ந்துள்ளான். போர் வீரர்களுக்கு உதவ தயாராக இருக்கிறான்.

போர் வீரர்கள் யார் வேண்டுமானாலும், மாநில அளவிலோ அல்லது மத்திய கட்டுப்பாட்டு அறையிலோ உதவி கேட்கலாம். ஒவ்வொரு போர் வீரருக்கும் உதவ காங்கிரஸ் தயாராக இருக்கிறது.

ஆட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, இந்த போரில் மக்களுக்கு உதவ காங்கிரஸ் தயாராக உள்ளது. உயரிய மனஉறுதியுடன், இந்த போரில் நாம் விரைவில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுவரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து எல்லோரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்.

இவ்வாறு சோனியாகாந்தி கூறியுள்ளார்.
Tags:    

Similar News