செய்திகள்
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் - கோப்புப்படம்

17 மாநிலங்களில் பரவியது கொரோனா - டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1023 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-04-05 08:29 GMT   |   Update On 2020-04-05 08:29 GMT
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 17 மாநிலங்களை சேர்ந்தவர்களில் 1023 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

புதுடெல்லி:

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் ஊர் திரும்பிய நிலையில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக தெலுங்கானாவில் இருந்து டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்களில் 6 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தனர். இதையடுத்து மாநாட்டில் பங்கேற்ற அனைவரின் விவரங்களையும் சேகரித்து அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் தற்போது வரை 1023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-



டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 17 மாநிலங்களை சேர்ந்தவர்களில் 1023 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் இந்த குறிப்பிட்ட நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்றவர்கள், தொடர்புடையவர்கள் என 22 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20 வயதுக்கு உட் பட்டோர் 9 சதவீதம் பேர், 21 முதல் 40 வயதுடையவர்களில் 42 சதவீதம் பேர், 41 முதல் 60 வயதுடையவர்கள் 33 சதவீதம் பேர் ஆவர். 60 வயதுக்கு மேல் 17 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News