செய்திகள்
ஹோலி

சீன பொருட்களை கொண்டு ஹோலி கொண்டாட வேண்டாம் - வைரல் பதிவுகளை நம்பலாமா?

Published On 2020-02-26 07:48 GMT   |   Update On 2020-02-26 07:48 GMT
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக இந்தியர்கள் சீன பொருட்களை கொண்டு ஹோலி கொண்டாட வேண்டாம் என கூறும் வைரல் பதிவுகளின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



உலக சுகாதார மையம் மற்றும் இந்திய அரசாங்கம் சேர்ந்து, ஹோலி சமயத்தில் சீன பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என கூறும் தகவல்கள் அடங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் புகைப்படத்தில் இந்திய அரசாங்கத்தின் முத்திரையுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்த வார்த்தைகள் இடம்பெற்று இருக்கிறது.

வைரல் புகைப்படத்தில் உள்ள தகவல்: மிகமுக்கிய அறிவிப்பு! சில தினங்களில் ஹோலி கொண்டாடப்பட இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரும் விழா இது. நம் நாட்டில் பெரும்பாலான நிறங்கள் மற்றும் பொருட்கள் சீனாவில் இருந்தே வருகின்றன. இங்கு நீங்கள் வாங்கும் விலை குறைந்த பொருட்கள் பெரும்பாலும் பாலிமர் மற்றும் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் சீனாவின் ஹூனை பகுதியில் உருவாக்கப்படுன்றன. இங்கிருந்து தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து வரும் பொருட்களை வாங்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம், என குறிப்பிடப்பட்டுள்ளது.



இதுபற்றிய இணைய தேடல்களில் வைரல் புகைப்படத்தில் இருக்கும் தகவல்கள் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. உலக சுகாதார மையம் மற்றும் மத்திய அமைச்சரவை சார்பில் சீன பொருட்களை வாங்குவதற்கு தடை விதிக்கவில்லை. மேலும் வைரல் தகவல்களில் உள்ள ஹூனை மாவட்டம் தைவானில் உள்ள கிராம பகுதியாகும்.

உண்மையில் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் இருந்தே கொரோனா பரவ துவங்கியது. வைரல் தகவல்களில் இருக்கும் தகவல்களை உறுதிப்படுத்தும் பத்திரிகை செய்தி குறிப்போ அல்லது செய்தி தொகுப்புகளோ இணையத்தில் கிடைக்கப்பெறவில்லை. அந்த வகையில் வைரல் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சில சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News