என் மலர்
நீங்கள் தேடியது "China"
- உலக இந்தி தினம் ஜனவரி 10-தேதி கொண்டாடப்படுகிறது.
- சீனாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது.
பீஜிங்:
உலக இந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10-தேதி கொண்டாடப்படுகிறது. சீனாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் உலக இந்தி தினம் கொண்டாடப்பட்டது. அங்குள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சீனாவில் வசிக்கும் இந்தியர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இந்திய துணைத்தூதர் பிரதிக் மாத்தூர், இந்தி மொழி எல்லைகளைக் கடந்து நம்மை இணைக்கிறது என கூறினார். அவர் பிரதமர் மோடியின் செய்தியையும் வாசித்தார்.
- ரஷியாவிடம் சில நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும்.
- புதினின் போர் எந்திரத்துக்கு தீனி போடும் நாடுகளை தண்டிக்க இம்மசோதாவை கொண்டுவருவது காலத்தின் அவசியம்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்து இருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பதவிக்கு வந்தவுடனே அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதற்காக ஒரு அமைதி திட்டத்தை உருவாக்கி உள்ள டிரம்ப், அதுகுறித்து ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடன் பேச ஸ்டீவ் விட்காப், தனது மருமகன் ஜேர்டு குஸ்னர் ஆகியோரை சிறப்பு தூதர்களாக நியமித்து உள்ளார்.
ஒருபுறம் அமைதி திட்டத்தை முன்வைத்து வரும் டிரம்ப், மறுபுறம் போரை நிறுத்த மறுக்கும் ரஷியாவை வழிக்கு கொண்டு வர மறைமுக அழுத்தமும் கொடுத்து வருகிறார்.
இதில் முக்கியமாக, உக்ரைனுடன் போரிட ரஷியாவிடம் பணம் இல்லாவிட்டால் போர் நின்றுவிடும் என்று அவர் கருதுகிறார். எனவே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்க அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி ரஷியாவிடம் இருந்து இந்தியா மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுப்பதற்காக இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தார்.
இதன் தொடர்ச்சியாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் கைவிடுவதற்காக, அந்நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக புதிய மசோதா ஒன்றை அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் மற்றொரு உறுப்பினர் புளுமெந்தாருடன் இணைந்து உருவாக்கி இருக்கிறார்.
ரஷியா பொருளாதார தடை மசோதா எனப்படும் இந்த மசோதாவுக்கு டிரம்ப் தற்போது ஒப்புதல் அளித்து உள்ளார். இது விரைவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து லிண்ட்சே கிரஹாம் தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
7-ந் தேதி, ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினேன். பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசித்தோம். அதைத்தொடர்ந்து, ரஷிய பொருளாதார தடை மசோதாவுக்கு டிரம்ப் பச்சைக்கொடி காட்டினார்.
அந்த மசோதா மீது மற்றொரு செனட் உறுப்பினர் புளுமெந்தார் உள்ளிட்டோருடன் நான் பல மாதங்களாக பணியாற்றினேன்.
ரஷியாவிடம் சில நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும். அதற்கு ஜனாதிபதி டிரம்ப் சம்மட்டி அடியாக அந்த நாடுகள் மீது அதிக வரி விதிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க டிரம்புக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
இந்த நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால்தான் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷியாவுக்கு பணம் கிடைக்கிறது. எனவே, போரை நிறுத்துவதற்காக இம்மசோதா கொண்டுவரப்படுகிறது.
அடுத்த வார தொடக்கத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
அமைதியை ஏற்படுத்த உக்ரைன் சலுகை அளிக்கிறது. ஆனால், ரஷிய அதிபர் புதின் நிறைய பேசுகிறார். அப்பாவிகளை கொன்று வருகிறார். எனவே, புதினின் போர் எந்திரத்துக்கு தீனி போடும் நாடுகளை தண்டிக்க இம்மசோதாவை கொண்டுவருவது காலத்தின் அவசியம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து விட்டதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவாத்ரா தன்னிடம் தெரிவித்ததாக கடந்த வாரம் லிண்ட்சே கிரஹாம் கூறியிருந்தார். அதனால், வரியை குறைக்கும்படி டிரம்பிடம் கூறுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது ஏற்கனவே டிரம்ப் விதித்த 25 சதவீத வரியால் இந்திய ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
தற்போது 500 சதவீத வரி விதிப்புக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
- உச்சி மாநாட்டில் பங்கேற்க தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் சீனா புறப்பட்டுச் சென்றார்.
- அங்கு அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளைச் சந்திக்கிறார்.
சியோல்:
சீனாவில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் உள்பட உயர் மட்ட அதிகாரிகளைச் சந்தித்து கொரிய தீபகற்பத்தில் அமைதியை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என தென் கொரிய அதிபர் மாளிகை கூறியது.
தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் சீனா புறப்படும் சில மணி நேரங்களுக்கு முன் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- அதிபர் மதுரோ கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், சீனாவின் சிறப்புத் தூதரை அவர் சந்தித்துப் பேசினார்.
- வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியில் சீனா தோராயமாக 76–80% வாங்குகிறது.
அமெரிக்க படைகளால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டு சீனா மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. இதனை கடுமையாக கண்டிக்கிறோம்.
ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது வெளிப்படையாக ராணுவத்தைப் பயன்படுத்துவதும், அந்த நாட்டு அதிபரை அராஜகமாகப் பிடிப்பதும் சர்வதேச சட்டங்களை படுமோசமாக மீறும் செயல்.
அமெரிக்காவின் இந்தச் செயல் ஐநா சபையின் அடிப்படை விதிகள் மற்றும் கொள்கைகளை மீறுவதாக உள்ளது.
மற்ற நாடுகளின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் அமெரிக்கா மதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.
அமெரிக்காவின் இத்தகையநடவடிக்கைகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று சீனா சாடியுள்ளது.
அதிபர் மதுரோ கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், சீனாவின் சிறப்புத் தூதரை அவர் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் சீனா-வெனிசுலா இடையிலான உறவு குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதல் சீனாவிற்குப் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய்:
உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு வெனிசுலாவில் உள்ளது. இது தோராயமாக 303 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெயைக் கொண்டுள்ளது. இது சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவை விட அதிகம்.
வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியில் சீனா தோராயமாக 76–80% வாங்குகிறது. நவம்பர் 2025 இல், சீனா ஒரு நாளைக்கு வெனிசுலாவிலிருந்து 613,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வாங்கியது.
வெனிசுலாவின் கனரக கச்சா எண்ணெய் சீன சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது மற்றும் குறைந்த விலையில் கிடைக்கிறது.
வெனிசுலா சீனாவிடம் பல ஆண்டுகளாக வாங்கிய சுமார் 60 பில்லியன் டாலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது. இந்தக் கடன் எண்ணெய்க்கு ஈடாக திருப்பிச் செலுத்தப்படுகிறது. எனவே வெனிசுலாவின் ஸ்திரத்தன்மை சீனாவிற்கு மிகவும் முக்கியமானது.
இனி வெனிசுலாவின் எண்ணெய் இருப்பை அமெரிக்காவே நிர்வகிக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
- டிரம்ப்பை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக சீனா தெரிவித்தது.
- சீனா தெரிவித்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை வர்த்தக காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.
அதை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம் என்றும் இதில் 3-ம் தரப்பு தலையீடு இல்லை என்றும் தெரிவித்தது. ஆனால் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்தார் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.
இதற்கிடையே டிரம்ப்பை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக சீனா தெரிவித்தது.
இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறும்போது, பல நாடுகள் இடையேயான மோதலை தீர்க்க நாங்கள் கவனம் செலுத்தினோம். வடக்கு மியான்மர், ஈரான் அணுசக்திப் பிரச்சினை மற்றும் இந்தியா-பாகிஸ் தான் இடையேயான மோதல், பாலஸ்தீனம்- இஸ்ரேல் பிரச்சினைகள், கம்போடியா-தாய்லாந்துக்கு இடையிலான மோதல் ஆகியவற்றில் மத்தியஸ்தம் செய்தோம் என்றார்.
சீனா தெரிவித்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த நிலையில் போரை நிறுத்த சீனா மத்தியஸ்தம் செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாகீர் அந்த்ராபி கூறியதாவது:-
இந்தியாவுடனான மோதலின்போது சீன தலைவர்கள் பாகிஸ்தான் தலைமையுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். மே 6 முதல் 10-ம் தேதி வரையிலான நாட்களில் அல்லது அதற்கு முன்னரும், பின்னரும் இந்திய தலைமையுடனும் சீன தலைவர்கள் சில தொடர்புகளை ஏற்படுத்தினர்.
மிகவும் நேர்மறையான தூதரக பரிமாற்றங்களால் வகைப்படுத்தப்பட்ட அந்தத் தொடர்புகள் பதற்றத்தைத் தணிப்பதிலும், பிராந்தி யத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவர முயற்சிப்பதிலும் பங்களித்தன என்று நான் நினைக்கிறேன்.
எனவே மத்தியஸ்தம் குறித்த சீனாவின் விளக்கம் சரியானது என்பதில் உறுதி யாக இருக்கிறேன். இது மோதலைத் தீர்ப்பதில் மேற்கொள்ளப்பட்ட பல சர்வதேச முயற்சிகளின் சிறப்பம்சமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விபத்துகளில் மீட்புப் பணியாளர்கள் கதவைத் திறக்க முடியாமல் திணறல்.
- விபத்தின் போது மெக்கானிக்கல் ஹேண்டில்கள் 98% சரியாக வேலை செய்வதாக ஆய்வில் தகவல்.
கார்களில் உள்ள தானியங்கி அல்லது மறைக்கப்பட்ட பவர் டோர் ஹேண்டில்களை தடை செய்ய சீன அரசு புதிய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.
சமீபகாலமாக எலக்ட்ரிக் கார்களில் (EV) அழகிற்காகவும், காற்றின் வேகத்தைத் தாங்கிச் செல்வதற்காகவும் (Aerodynamics) கதவின் உட்புறமாக மறைந்திருக்கும் ஹேண்டில்கள் பிரபலமாகின. ஆனால், இதில் பல பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
விபத்து ஏற்பட்டு காரின் மின்சாரம் துண்டிக்கப்படும்போது, கதவுகள் திறக்காமல் பயணிகள் உள்ளேயே சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. பல விபத்துகளில் மீட்புப் பணியாளர்கள் கதவைத் திறக்க முடியாமல் திணறிய நிகழ்வுகள் சீனாவில் பதிவாகியுள்ளன.
இதேபோல், கடும் குளிரில் இந்த ஹேண்டில்கள் உறைந்து போவதும், மழையினால் மின் கசிவு ஏற்பட்டு வேலை செய்யாமல் போவதும் வாடிக்கையாளர்களிடையே புகார்களை அதிகரித்தது.
இந்த வகை ஹேண்டில்களில் குழந்தைகளின் விரல்கள் சிக்கி காயமடையும் சம்பவங்கள் சீனாவில் அதிகளவில் பதிவாகியுள்ளன.
ஆய்வுகளின்படி, விபத்தின் போது மெக்கானிக்கல் ஹேண்டில்கள் 98% சரியாக வேலை செய்கின்றன. ஆனால், இந்த எலக்ட்ரானிக் ஹேண்டில்கள் வெறும் 67% மட்டுமே பலன் தருகின்றன என்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையின்படி, ஜனவரி 1, 2027 முதல் சீனாவில் விற்பனை செய்யப்படும் 3.5 டன்களுக்கு குறைவான எடைகொண்ட அனைத்து கார்களிலும் மெக்கானிக்கல் எமர்ஜென்சி ஓப்பனிங் வசதி இருக்க வேண்டும்.
காரின் மின்சாரம் முழுமையாக நின்றாலும், எந்தக் கருவியும் இன்றி கைகளால் கதவைத் திறக்கும் வசதி கட்டாயம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கதவிலும் வெளிப்புற ஹேண்டில்கள் கைகளால் பிடித்து இழுக்கும் வகையில் போதிய இடைவெளியுடன் இருக்க வேண்டும்.
இந்த தடை உத்தரவு 2027ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த வாரம் சீனா தைவான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியது.
- தைவானுடன் வேறு எந்த நாடும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்தது.
பீஜிங்:
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனி நாடாகப் பிரிந்தது. ஆனால் தைவானை இன்னும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வருகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைப்பதற்காக சீனா போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் சீனா பதற்றத்தைத் தூண்டுகின்றது.
தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தையும் தூண்டுகிறது. கடந்த வாரம் சீனா தைவான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
தைவானை தனது நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாகவே சீனா கருதுகிறது. தற்போது அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே தைவான் விரைவில் சீனாவுடன் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.
- சீனாவின் பீஜிங்கில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
- இதில் பேசிய சீன வெளியுறவு மந்திரி, இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்தோம் என்றார்.
பீஜிங்:
பீஜிங்கில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யீ, கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றமான சூழலின்போது தாங்கள் மத்தியஸ்தம் செய்ததாகக் குறிப்பிட்டார்.
சர்வதேச அளவில் மோதல்களைத் தீர்ப்பதிலும், நீடித்த அமைதியைக் கட்டியெழுப்புவதிலும் சீனா நியாயமான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே, இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறிவரும் நிலையில் சீன மந்திரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- சீனாவில் தற்போது 100 பெண்களுக்கு 104 ஆண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது.
- நேபாளத்தின் கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களை இலக்கு வைக்கும் தரகர்கள், சீனாவில் ஆடம்பர வாழ்க்கையை வைத்து ஏமாற்றுகின்றனர்.
நேபாளத்தில் வறுமையில் வாடும் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவர்களைச் சீனாவுக்குக் கடத்திச் சென்று விற்பனை செய்யும் கும்பல்கள் அம்பலமாகி உள்ளன.
சீனாவில் முன்பிருந்த ஒரு குழந்தை கொள்கை காரணமாக அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட பல கோடிகள் அதிகமாக உள்ளது. தோராயமாக சீனாவில் தற்போது 100 பெண்களுக்கு 104 ஆண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது.
இதனால் சீன ஆண்களுக்குத் தங்கள் நாட்டில் மணப்பெண் கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.
இதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதக் கடத்தல் கும்பல்கள், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து பெண்களைச் சீனாவுக்குக் கடத்துகின்றன.
நேபாளத்தின் கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களை இலக்கு வைக்கும் தரகர்கள், சீனாவில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் கைநிறைய ஊதியம் கிடைக்கும் வேலை என ஆசை வார்த்தைகளைக் கூறி பெண்களைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்கின்றனர்.
இந்த கும்பலை சேர்ந்த சீன ஆண்கள் நேபாளத்திற்கு வந்து சட்டப்படித் திருமணம் செய்து கொள்வது போல நாடகமாடி, சுற்றுலா விசாவில் அந்தப் பெண்களைச் சீனாவுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
சீனா சென்றடைந்த பிறகு, அந்தப் பெண்கள் அங்கிருக்கும் மற்ற ஆண்களுக்குப் பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படுகின்றனர்.
அவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு, பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. மேலும் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
சீன சமூக வலைதளங்களில் மேட்ரிமோனி என்ற போர்வையில் நேபாளப் பெண்களை ஏலம் விடுவது போன்ற நேரலை வீடியோக்கள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே நேபாள காவல்துறையின் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவு, காத்மாண்டு விமான நிலையத்தில் சீனர்களுக்கு மணப்பெண்களாக அழைத்துச் செல்லப்பட்ட பல பெண்களை மீட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சீனக் குடிமக்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய நேபாளத் தரகர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வறுமையைப் பயன்படுத்திப் பெண்களின் வாழ்வைச் சிதைக்கும் இந்தத் தொழில்முறை கடத்தல் நெட்வொர்க் தெற்காசிய நாடுகளில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
- ரோபோக்கள் தன்னிச்சையாக பேட்டரிகளை மாற்றிக்கொள்ளும்
- ரோபோக்களில் அதிநவீன கேமராக்கள், சென்சார்கள் மற்றும் இரவு நேரத்திலும் பார்க்கும் வசதி (Night Vision) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
வியட்நாம் உடனான எல்லை ரோந்து மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு 'Walker s2' என்ற மனித ரோபோக்களை அனுப்ப சீனா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதம் பணியமர்த்தல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஷென்செனை தளமாகக் கொண்ட UBTECH ரோபாட்டிக்ஸ் கார்ப்பரேஷன், வியட்நாமுக்கு அருகிலுள்ள கடலோரப் பகுதியான குவாங்சியில் உள்ள ஃபாங்செங்காங் எல்லைக் கடவையில் அதன் வாக்கர் S2 மனித உருவ ரோபோக்களை நிலைநிறுத்த $37 மில்லியன் ஒப்பந்தத்தை அரசிடமிருந்து பெற்றுள்ளது.
வாக்கர் S2 என்பது கால்கள், கைகள் மற்றும் உடற்பகுதியுடன் இணைந்த முழு அளவிலான மனித உருவ ரோபோ ஆகும். இந்த ரோபோ மனித நடமாட்டம் அதாவது மனிதர்கள் அதிகம் கூடும் இடங்களில் பணியமர்த்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் தாங்களே பேட்டரிகளை மாற்றிக்கொள்ளும் என்றும், 125° கோணத்தில் வளையும், 15 கிலோ எடையை கையாளும் திறனும் கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ரோபோக்களில் அதிநவீன கேமராக்கள், சென்சார்கள் மற்றும் இரவு நேரத்திலும் பார்க்கும் வசதி (Night Vision) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
ஃபாங்செங்காங்கில், பயணிகள் வரிசைகளை வழிநடத்துதல், வாகனங்களை இயக்குதல் மற்றும் பயணிகளின் அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் எல்லை அதிகாரிகளுக்கு ரோபோக்கள் உதவும். சில ரோபோக்கள் ஹால்கள் மற்றும் காத்திருப்பு பகுதிகளில் ரோந்து செல்லும்.
மற்ற ரோபோக்கள் சரக்கு பாதைகளுக்குள் செயல்படும். கொள்கலன் அடையாள எண்களைச் சரிபார்த்தல், முத்திரைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் அனுப்பும் மையங்களுக்கு நிலை புதுப்பிப்புகளை அனுப்புதல் (Status Updates) மூலம் தளவாடக் குழுக்களை ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 11.1 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல்.
- சீனாவை தூண்டும் எந்தவொரு செயலுக்கும் உறுதியா பதிலடி கொடுக்கப்படும் என சீனா உறுதி.
தைவானுக்கு 11.1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது சீனாவை ஆத்திரமூட்டச் செய்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீனா அதிரடி தடை விதித்துள்ளது.
அத்துடன் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம், தைவான் விவகாரத்தில் சீனாவை தூண்டிவிடும் எந்தவொரு முயற்சிக்கும் உறுதியான பதில் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
தைவான் சீனாவின் பகுதி என்று சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடும் வகையில், அமெரிக்காவின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 20 அமெரிக்க ராணுவம் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் 10 சீனியர் நிர்வாகிகள் ஆகியோருக்கு தடை விதித்துள்ளது.
- சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 114 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், ஏற்றுமதி வெறும் 14.25 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது.
- மூலோபாய கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, உலகளாவிய தெற்கு போன்ற அலங்கார சொற்களுக்கு அப்பால் பார்த்தால்...
ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு இந்தியா - சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

2024 அக்டோபரில் ரஷியாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர்.

லடாக் எல்லையில் நிலவிய நான்கு ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வாக, ரோந்து பணிகளை மீண்டும் தொடங்குவது மற்றும் தத்தமது படைகளை தங்கள் எல்லைக்குள் மீண்டும் பின்வாங்க செய்வது உள்ளிட்டவை குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் 2025-ல் செயல்படுத்தப்பட்டன.
அதேநேரம் இந்த ஆண்டில் ஆகஸ்ட்டில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அங்கு நடந்த சந்திப்பில் ஓரளவு உறுதியான சில முடிவுகள் எட்டப்பட்டன என்றே சொல்லலாம். 2018-க்குப் பிறகு பிரதமர் இந்த ஆண்டுதான் மீண்டும் சீனா சென்றிருந்தார்.

இந்த பேச்சுவார்த்தையின் நேரடி விளைவாக மோதல் மற்றும் கொரோனாவால் 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியா- சீனா நேரடி விமான சேவை கடந்த அக்டோபரில் மீண்டும் தொடங்கப்பட்டது. அக்டோபர் 26 அன்று இண்டிகோ நிறுவனம் கொல்கத்தா மற்றும் குவாங்சூ இடையே தனது சேவையைத் தொடங்கியது.

மேலும் லிபுலேக் மற்றும் நாது லா போன்ற முக்கியமான கணவாய்கள் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இந்தியா சீனா நெருங்குவதற்கு முக்கிய காரணம், அமெரிக்க அதிபர் இந்திய பொருட்கள் மீது விதித்த 50 சதவீத வரியே ஆகும்.
டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் வரிக் கட்டுப்பாடுகள், ஆசியாவின் இரு பெரும் சக்திகளான இந்தியாவையும் சீனாவையும் தங்களுக்குள் வர்த்தகத்தை புதுப்பித்துக்கொள்ள செய்தது.
இந்த சந்திப்புகள் மூலம் இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளும் முழுமையான நண்பர்களாக மாறவில்லை என்றாலும், பொருளாதாரத் தேவைகளுக்காகவும், அமெரிக்காவுக்கு எதிரான பிராந்திய ஒற்றுமைக்காகவும் முயற்சியாக அமைந்தது.
ஆனால் இதுதவிர பெரிய அளவிலான முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக 2024 இல் முடிவெடுக்கப்பட்டபடி தத்தமது படைகளை விலக்கிக் கொண்டாலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) இன்னும் சில இடங்களில் பதற்றம் முழுமையாகத் தணியவில்லை.
எல்லைப் பிரச்சனையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. லடாக்கில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாங்காங் ஏரியில் தங்கள் உள்ள பகுதியில் புதிய கட்டமைப்புகளை சீனா உருவாக்கி வருவதும் சாட்டிலைட் ஆதாரம் மூலம் தெரியவந்துள்ளது.

எல்லையில் வான் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கும் சீனா:
திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் வான் பாதுகாப்பு வளாகம் ஒன்றை சீனா கட்டி வருவது கடந்த அக்டோபரில் வெளியான செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்தது.
2020இல் திபெத்தின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன வீரர்கள் தாக்குதல் நடத்தி 20 இந்திய வீரர்களை கொன்ற இடத்தில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் இந்த சீன வான் பாதுகாப்பு வளாக கட்டுமானம் முழுவீச்சில் நடைபெறுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.
அருணாச்சல பிரதேச பெண்ணின் கசப்பான அனுபவம்:
அதேநேரம் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை தங்களுடையது என்றும் சீனா வெளிப்படையாக தெரிவித்தும், வரைபடம் வெளியிட்டும், இந்திய பகுதிகளுக்கு சீன பெயர்களை சூட்டியும் வருகிறது. 2025 மே மாதம், சுமார் 27 இடங்களுக்குச் சீனா புதிய பெயர்களை அறிவித்ததை இந்தியா வன்மையாகக் கண்டித்தது. "பெயர்களை மாற்றுவதால் உண்மை மாறிவிடாது, அருணாச்சல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி" என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது.
ஆனால் இதன் உச்சமாக கடந்த மாதம் லண்டனில் இருந்து ஜப்பான் செல்ல இணைப்பு விமானம் ஏற சீனாவின் ஷாங்காய் விமான நிலயத்தில் காத்திருந்த இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணை சீன அதிகாரிகள் 18 மணிநேரம் தடுத்து வைத்தனர். அருணாசல பிரதேசம் சீனாவின் பகுதி என்பதால் அப்பெண்ணின் பாஸ்போர்ட் செல்லாதாம்.. இதில் சீன பாஸ்போர்ட்க்கு அப்ளை பண்ணுங்க என கூறி அப்பெண்ணை கிண்டல் வேறு செய்துள்ளனர் சீன அதிகாரிகள்.
அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட அப்பெண், சீனாவில் உள்ள இந்திய தூதரக தலையீட்டின் பின் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதோடு நிற்கவில்லை சீனா.

அருணாச்சலப் பிரதேசம் சீனாவிற்கு சொந்தமானது என சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேட்டி வேறு கொடுத்து இந்த செயலுக்கு விளக்கம் அளித்த கொடுமை நிகழ்ந்தது.
இந்தியா சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இனியேனும் அருணாச்சல பிரதேச மக்களுக்கு இதுபோல ஏதும் சங்கடம் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என பாதிக்கப்பட்ட பெண் பிரதமர் மோடிக்கு வேறு கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்.
எல்லையில் நிலவும் இந்த இழுபறி நிலை, இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் ஆழமான நம்பிக்கை ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது.
சரி, பொருளாதார உறவு எப்படி?
இந்த ஆண்டில் இந்தியா - சீனா இடையிலான வர்த்தகம் சுமார் 127.71 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கொஞ்சம் பொறுங்கள்.. இதில் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவால் உள்ளது.
சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 114 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், ஏற்றுமதி வெறும் 14.25 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. அதாவது, வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 99.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
சீனாவிடமிருந்து மின்னணுப் பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களை இந்தியா அதிகம் நம்பியிருப்பது இந்தத் தரவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒரு பக்கம் பிரதமர் மோடியிடம் ஜி ஜிங் பின் நட்பு முகம் காட்டும் வேலையில் மறுபுறம் சீனா தங்கள் நலன்களை முன்னிறுத்தி அதன் வேலையை தொடர்ந்து வருகிறது.
எனவே மூலோபாய கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, உலகளாவிய தெற்கு போன்ற அலங்கார சொற்களுக்கு அப்பால் பார்த்தால், 2025-ல் இந்தியா-சீனா உறவு சந்திப்புகளில் இணக்கமாக தோன்றினாலும் செயல்கள் அதற்கு நேர்மாறாகவே இருந்து வருகிறது.






