செய்திகள்
அமித்ஷா

பயங்கரவாதிகளை ஒழித்தவர்களுக்கும், ஷாகீன் பாக் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்போருக்கும் இடையிலான தேர்தல் இது - அமித்ஷா

Published On 2020-01-30 15:33 GMT   |   Update On 2020-01-30 15:33 GMT
டெல்லி சட்டமன்ற தேர்தல் பயங்கரவாதிகளை ஒழித்தவர்களுக்கும், ஷாகீன் பாக் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் இடையேயானது என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் வரும் 8-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் 11-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி தீவிர களப்பணியாற்றி வருகிறது. அதேசமயம், ஆட்சியைப்பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கிடையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் பெரும் வன்முறை நடந்த ஷாகீன் பாக் பகுதியிலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. 

இந்த போராட்டத்திற்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர். 

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஷடார்பூர் சஞ்சய் காலணி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

டெல்லி சட்டமன்ற தேர்தலில் இரண்டு சக்திகள் நேருக்கு நேர் மோதுகின்றன. பாகிஸ்தான் நாட்டின் மீது சர்ஜிகல் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை அழித்த பிரதமர் நரேந்திர மோடி ஒரு பக்கம். 

ஷாகீன் பாக் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் மறு பக்கம். இதில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். 



டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா தான் ஷாகீன் பாக் போராட்டக்காரர்களுடன் இருப்பதாக கூறுகிறார். நான் இப்போது சொல்வது என்னவென்றால் நாங்கள் சஞ்சய் காலனியுடன் இருக்கிறோம். 

பாகிஸ்தானில் இருந்து சஞ்சய் காலனியில் தங்கியுள்ள மக்கள் அனைவருக்கும் எனக்கும், என் மகனுக்கு இந்த நாட்டில் என்னென்ன உரிமைகள் உள்ளதோ அது அத்தனையும் உங்களுக்கும் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

டெல்லி மக்கள் அளிக்கும் வாக்குகள் கெஜ்ரிவால் அரசை மாற்றுவது மட்டுமல்லாமல், அவர்களது சித்தாந்தத்தையும் தோற்கடிக்கும். டெல்லியில் பாஜக ஆட்சி அமைவதன் மூலம் பாரத மாதாவை வணங்கும் சித்தாந்தம் பாதுகாக்கப்படும்.

என அமித்ஷா தெரிவித்துள்ளார்.   
Tags:    

Similar News