செய்திகள்
பிரதமர் மோடி உரையாற்றிய காட்சி

70 ஆண்டுகளில் ஜனநாயகத்துக்கு இந்தியா வலிமையூட்டியுள்ளது - பிரதமர் மோடி புகழாரம்

Published On 2019-11-26 08:27 GMT   |   Update On 2019-11-26 10:41 GMT
அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட தினமான இன்று பாராளுமன்ற இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி 70 ஆண்டுகளில் இந்தியா ஜனநாயகத்துக்கு வலிமையூட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
புதுடெல்லி:

அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட தினமான இன்று பாராளுமன்ற இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி 70 ஆண்டுகளில் இந்தியா ஜனநாயகத்துக்கு வலிமையூட்டியுள்ளதாக
குறிப்பிட்டார்.

இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டம் 26-11-1949 அன்று உருவாக்கப்பட்டது. பல்வேறு மாகாணங்கள் மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியா முழுவதும்  26-1-1950 அன்று முதல் நமது அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் மாதம் 26-ம் தேதி ஆண்டுதோறும் அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில், 70-வது அரசியலமைப்பு சட்ட தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாராளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.



அப்போது அவர் கூறியதாவது:-

நமது நாட்டின் மிகவும் உயரிய அரசியலமைப்பு சட்ட தினத்தை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இதே நாளில்தான் மும்பை பயங்கரவாத தாக்குதலும் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியர்களின் கண்ணியம் மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாடு ஆகியவை நமது அரசியலமைப்பு சட்டத்தின் இருபெரும் தாரகமந்திரங்கள் ஆகும். கடந்த 70 ஆண்டுகளில் ஜனநாயகத்துக்கு  இந்தியா அதிகாரம் அளித்து வலிமையூட்டியுள்ளதை நான் நினைவுகூர்கிறேன்.

நமது கடமைகளை நிறைவேற்றாமல் நமது உரிமைகளை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியாது. சாலைவிதிகளை கடைபிடிப்பதும்கூட குடிமக்களாக நமது கடமைகளை நாம் நிறைவேற்றுவதற்கான எடுத்துக்காட்டு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.



முன்னதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் அரசியலமைப்பு சட்ட தினத்தின் சிறப்பை விளக்கிப் பேசினர்.

அரசியலமைப்பு சட்ட தினத்தின் 70-வது ஆண்டு சிறப்பு மலர் மற்றும் நினைவு நாணயங்களும் இன்று வெளியிடப்பட்டன.
Tags:    

Similar News