செய்திகள்
எடியூரப்பா

வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மந்திரி ஆக்குவோம் என கூறுவதில் தவறு இல்லை: எடியூரப்பா

Published On 2019-11-18 02:28 GMT   |   Update On 2019-11-18 02:28 GMT
வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மந்திரி ஆக்குவோம் என கூறுவதில் தவறு இல்லை என்றும், இதை காங்கிரஸ் எதிர்ப்பது சரியல்ல என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் கடந்த வாரம் பா.ஜனதாவில் சேர்ந்தனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் மந்திரி ஆக்கப்படுவார்கள் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். இது வாக்காளர்களை கவரும் விதமாக இருப்பதாக கூறிய காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் எடியூரப்பா மீது புகார் செய்தது.

இந்த நிலையில் இதுகுறித்து பெங்களூருவில் நிருபர்களுக்கு எடியூரப்பா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்களை தோற்கடிப்பது தான் தங்களின் நோக்கம் என்று சில கட்சிகளின் தலைவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். எடியூரப்பா தலைமையில் நல்லாட்சி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தனர். நான் முதல்-மந்திரியாக தொடர வேண்டும், நல்லாட்சி வேண்டும், பெரும்பான்மை அரசு வேண்டும் என்று விரும்பினால், மக்கள் பா.ஜனதாவை ஆதரிப்பார்கள்.

தேர்தல் பிரசாரத்தின்போது, வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மந்திரி ஆக்குவோம் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை. இதில் என்ன குற்றம் உள்ளது. இதை காங்கிரஸ் எதிர்ப்பது சரியல்ல. நான் கூறிய கருத்து குறித்து தேர்தல் ஆணையம் எதுவும் செய்ய முடியாது. முதல்-மந்திரியாக இருக்கும் எனக்கு யாரை மந்திரியாக்க வேண்டும், யாரை மந்திரிசபையில் இருந்து நீக்க வேண்டும் என்பது தெரியும். அது எனது அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இதுபற்றி சித்தராமையா மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “இடைத்தேர்தலில் பா.ஜனதாவையும், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களையும் தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். இந்த விஷயத்தில் எங்களின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. தகுதி நீக்க நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. அதேபோல் இடைத்தேர்தலில் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்“ என்றார்.

ஜனதா தளம்(எஸ்) கட்சியும், இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை தோற்கடிப்போம் என்று ஏற்கனவே கூறியுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
Tags:    

Similar News