செய்திகள்
குமாரசாமி

பிரதமரிடம் பேச பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தைரியம் இல்லை- குமாரசாமி

Published On 2019-10-05 01:49 GMT   |   Update On 2019-10-05 01:49 GMT
கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை பெறுவதற்காக பிரதமரிடம் பேச பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தைரியம் இல்லை என்று குமாரசாமி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
மைசூரு :

மைசூருவில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வடகர்நாடகம் சமீபத்தில் பெய்த கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு 2 மாதங்கள் ஆகியும், மக்களுக்கு இன்னும் நிவாரண நிதி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த நிவாரணமும் வழங்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசை விட மாநில அரசு அலட்சியமாக உள்ளது.

கர்நாடக அரசு மனசு வைத்திருந்தாலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி இருக்கலாம். ஆனால் மாநில அரசு எந்த முயற்சியும் எடுக்காமல், மத்திய அரசின் நிதி உதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தான் பரிதவித்து வருகிறார்கள். நான் முதல்-மந்திரியாக இருந்த போது, வெள்ள பாதிப்பு பற்றி பிரதமர் மோடி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றாக பேசினார். நானும் அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளேன். எதிர்க்கட்சியை சேர்ந்த என்னையே பிரதமர் நேரில் சந்தித்து பேசினார்.



தற்போது கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. இருப்பினும் பா.ஜனதாவினர் பிரதமரை தொடர்பு கொண்டு நிவாரண நிதியை பெற எந்த முயற்சியும் செய்யாமல் உள்ளனர். கர்நாடகத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாக சேர்ந்து டெல்லிக்கு சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினால், கர்நாடகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை பெற முடியும். ஆனால் அவர்களுக்கு பிரதமரிடம் பேசுவதற்கு தைரியம் இல்லை.

கர்நாடகத்தில் அரசு கஜானா காலியாக இருப்பதாக விஜயேந்திரா (எடியூரப்பா மகன்) கூறியுள்ளார். ஆனால் மாநில அரசின் கஜானா காலியாகவில்லை. போதுமான அளவு மக்கள் வரிப்பணம் இருப்பு உள்ளது. எங்கேயோ விஜயேந்திராவின் கஜானா காலியாகி இருக்கலாம். அதை நிரப்பிக்கொள்வதற்காக இவ்வாறு அவர் பேசி இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News