செய்திகள்
சசி தரூர்

ஓட்டு சதவீதத்தை உயர்த்திக்காட்டினார் மோடி- சசி தரூர் புகழாரம்

Published On 2019-08-30 01:55 GMT   |   Update On 2019-08-30 01:55 GMT
கேரள மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், பிரதமர் மோடியை தொடர்ந்து புகழ்ந்து பேசி வருவது அந்தக் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருவனந்தபுரம் :

கேரள மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், பிரதமர் மோடியை தொடர்ந்து புகழ்ந்து பேசி வருவது அந்தக் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கடந்த புதன்கிழமை சசி தரூரிடம் விளக்கம் கேட்டார்.

சசி தரூர் விளக்கம் அளிக்கும் வகையில் முல்லப்பள்ளி ராமச்சந்திரனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் மோடிக்கு மீண்டும் புகழாரம் சூட்டி உள்ளார்.



அவர், “2014 தேர்தலில் பாரதீய ஜனதாவின் ஓட்டு சதவீதம் 31. அதை 2019 தேர்தலில் 37 சதவீதமாக உயர்த்திக்காட்டியவர் மோடி. அவர் தங்களுக்கு கொஞ்சம் செய்கிறார் என்ற உணர்வு வாக்காளர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்” என கூறி உள்ளார்.

மேலும், “மக்கள் இன்னும் அவருக்கு ஓட்டு போடுகிறார்கள். அப்படி இருக்கும்போது, மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்று நாம் சொல்லிக்கொண்டிருந்தால் அது உங்களுக்கு ஓட்டுகளை பெற்றுத்தர உதவாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த 2 தேர்தல்களில் நம்மை விட்டு விட்டு பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்தவர்களின் நம்பிக்கையை, ஓட்டுகளை நாம் மீண்டும் வென்றாக வேண்டும். அதற்கு, மோடியிடம் அவர்களுக்கு உள்ள ஈர்ப்பை, நாமும் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நமது விமர்சனத்துக்கு இன்னும் நம்பகத்தன்மை ஏற்படும். அதைத்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்றும் அவர் கூறி இருக்கிறார். 
Tags:    

Similar News