செய்திகள்
தேவேகவுடா, சித்தராமையா

சபாநாயகரின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி- தேவேகவுடா, சித்தராமையா கருத்து

Published On 2019-07-29 01:54 GMT   |   Update On 2019-07-29 02:35 GMT
14 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறித்த விஷயத்தில் தேவேகவுடா, சித்தராமையா ஆகியோர் கருத்து தெரிவித்தனர். சபாநாயகரின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கட்சிக்கு எதிராக செயல்பட்ட எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்துள்ளார். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் சபாநாயகர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய உதாரணங்கள் உண்டு. ஆனால் சபாநாயகர் ரமேஷ்குமார் எடுத்துள்ள தகுதி நீக்க நடவடிக்கை வரலாற்று சிறப்பு மிக்கது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.



மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மக்களின் தீர்ப்புக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டப்படியும் அமைந்த அரசை கவிழ்க்க செய்த எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் சரியான தண்டனையை வழங்கியுள்ளார். பா.ஜனதாவின் ஆபரேஷனுக்கு உள்ளானவர்களுக்கு இது ஒரு சரியான பாடம்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறியிருக்கிறார்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சபாநாயகர் ரமேஷ்குமார், 14 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. சுயநல அரசியல், அதிகார ஆசை, மக்களின் தீர்ப்பை நிராகரித்துவிட்டு தன்னைத்தானே விற்பனை செய்து கொள்ளும் மிக மோசமான கலாசாரத்திற்கு இந்த தீர்ப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என்பது எனது நம்பிக்கை.

அரசுகள் வரும் போகும். பதவிகள் அரசியலில் எப்போதும் நிரந்தரமல்ல. அடுத்த தலைமுறைக்கு நாம் எத்தகைய கலாசாரத்தை விட்டு செல்கிறோம் என்பது முக்கியம். சபாநாயகர் இன்று (நேற்று) பிறப்பித்துள்ள உத்தரவு, சந்தர்ப்பவாத அரசியலை தடுத்து நிறுத்தும் வகையில் உள்ளது. இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News