செய்திகள்
மரண தண்டனை

90 சதவீத மாநிலங்கள் மரண தண்டனை வேண்டும் என்கின்றன: மத்திய மந்திரி தகவல்

Published On 2019-07-26 14:55 GMT   |   Update On 2019-07-26 14:55 GMT
இந்தியாவில் உள்ள 90 சதவீத மாநிலங்கள் மரண தண்டனை அப்படியே இருக்க வேண்டும் என விரும்புகிறது என்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இதில் மத்திய அரசின் நிலை என்ன? என்பது குறித்து தனிநபர் மசோதா மூலம் விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த உள்துறை இணை மந்திரி ஜி. கிஷன் ரெட்டி, அரசு இதுகுறித்து ஆராய்ந்து வருகிறது. ஆனால் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றார்.

மேலும், இதுகுறித்து கிஷன் ரெட்டி பேசுகையில் ‘‘90 சதவீத மாநிலங்கள் மரண தண்டனை அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஒரு மாநிலம்தான் வேண்டாம் என்கிறது.

விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தால், ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியும். அதன்பின் கவர்னரிடம் கருணை மனு கொடுக்கலாம். அவர் நிராகரித்தால் உச்சநீதிமன்றத்தை நாடலாம். அதன்பின் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பலாம். இதனால் மரண தண்டனையில் இருந்து அப்பாவிகள் தப்புவதற்கு பல முயற்சிகள் உள்ளன.

மரண தண்டனை விதிவிலக்கான மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் வழங்கப்படுகிறது. ஜனாதிபதிக்கு 135 கருணை மனுக்கள் கிடைக்கப் பெற்றன. இதில் 34 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 91 மனுக்கள் அனுமதிக்கப்பட்டன. ஒரு மனு இன்னும் நிலுவையில் உள்ளது.

2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் தலா ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2014-ல் வழங்கப்படவில்லை.  ’’ என்றார்.
Tags:    

Similar News