செய்திகள்
ஹேமமாலினி

கடந்த 5 ஆண்டுகளில் பாஜக எதுவும் செய்யவில்லை - ஹேமமாலினி

Published On 2019-07-09 09:10 GMT   |   Update On 2019-07-09 09:10 GMT
கடந்த 5 ஆண்டுகளில் என் தொகுதியில் சுற்றுலா மேம்பட பா.ஜனதா அரசு எதுவுமே செய்யவில்லை என்று மதுரா தொகுதி எம்.பி. ஹேமமாலினி கூறினார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் பா.ஜனதா கட்சியை அந்த கட்சியின் எம்.பி.யான ஹேமமாலினி குற்றம்சாட்டி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

சுற்றுலா வளர்ச்சி தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது மதுரா தொகுதி எம்.பி. ஹேமமாலினியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது மதுரா தொகுதியில் சுற்றுலாவுடன் தொடர்புடைய பல பகுதிகள் உள்ளன. ஆனால் அந்த பகுதிகளை சுற்றுலா தலங்களாக மேம்படுத்த போதிய அளவுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் என் தொகுதியில் சுற்றுலா மேம்பட பா.ஜனதா அரசு எதுவுமே செய்யவில்லை. மதுரா, பிருந்தாவனம், கோவர்த்தனம், பர்சனா, நந்தகான் பகுதிகளில் சுற்றுலா மேம்பட குறிப்பிட்ட திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. மேற்கொண்டு இதுபற்றி விரிவாக பேச எனக்கு தயக்கமாக உள்ளது.

ஹேமமாலினி இவ்வாறு பேசியபோது காங்கிரஸ் எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

ஹேமமாலினியைத் தொடர்ந்து பீகார் மாநிலம் சரன் தொகுதியில் இருந்து தேர்வான பா.ஜ.க. எம்.பி.யான ராஜீவ் பிரதாப் ரூடியும் பா.ஜ.க. அரசு மீது அதிருப்தி தெரிவித்து பேசினார். அவர் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில் 8 மாநிலங்களில் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.500 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் எனது மாநிலமான பீகாருக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் என் தொகுதியில் சுற்றுலா வளர்ச்சிக்காக பல திட்ட பரிந்துரைகளை நான் அரசிடம் கொடுத்தேன்.

ஆனால் அவையெல்லாம் என்ன ஆனது என்பதே தெரியவில்லை. அந்த திட்ட பரிந்துரைகள் ஏன் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றும் தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து மத்திய சுற்றுலா மந்திரி பிரகலாத் சிங் படேல் கூறுகையில், ‘‘ஹேமமாலினி, ராஜீவ் பிரதாப் ரூடி தொகுதியில் சுற்றுலா வளர்ச்சிக்கு கவனம் செலுத்தப்படும்’’ என்றார்.
Tags:    

Similar News