செய்திகள்

ராகுல்காந்தியுடன் சித்தராமையா திடீர் சந்திப்பு- அரசு கவிழ்ந்தால் கவலைப்பட தேவை இல்லை

Published On 2019-06-20 01:58 GMT   |   Update On 2019-06-20 01:58 GMT
கர்நாடகத்தில் கூட்டணியால் காங்கிரசுக்கு தான் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு கவிழ்ந்தால் கவலைப்பட தேவை இல்லை என்றும் ராகுல்காந்தியிடம் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூரு :

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி படுதோல்வி அடைந்தது. கூட்டணி அமைத்தும் தோல்வி அடைந்ததால் காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பாராளுமன்ற தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்ததே காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்று அக்கட்சியின் பல்வேறு தலைவர்கள் பகிரங்கமாகவே கூறினர்.

இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அவர் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன என்பதை சித்தராமையா விளக்கி கூறினார். ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்ததே காங்கிரசின் படுதோல்விக்கு முக்கிய காரணம் என்று அவர் எடுத்துக்கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் சித்தராமையா, ராகுல்காந்தியுடன் பேசியதாக வெளியாகியுள்ள விவரங்கள் வருமாறு:-

கர்நாடகத்தில் புதிய திட்டங்களை அமல்படுத்தவில்லை, வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை, வறட்சி நிவாரண பணிகளை சரியான முறையில் மேற்கொள்ளவில்லை, கீழ்மட்டத்தில் ஊழலை தடுக்க கடினமான நடவடிக்கையை எடுக்கவில்லை. இதனால் கூட்டணி அரசு மீது சாமானிய மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பழைய மைசூரு பகுதியில் மட்டுமே ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு பலம் உள்ளது. மற்ற பகுதிகளில் அக்கட்சிக்கு செல்வாக்கு இல்லை. ஆனால் காங்கிரசுக்கு மாநிலத்தின் அனைத்து பகுதியிலும் செல்வாக்கு உள்ளது.

இந்த கூட்டணி அரசு சரியாக நடைபெற்றாலும், நடைபெறாமல் போனாலும், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, ஆனால் காங்கிரசுக்கு மாநிலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்த முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்றால், அதில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்படும். அத்துடன் பா.ஜனதாவுக்கு ஆட்சி அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் நிலை ஏற்படும்.

பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற ஓட்டுகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால் இந்த நோக்கம் வெற்றி பெறவில்லை. கூட்டணியால் காங்கிரசுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி தொடர்ந்தால், அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட நிலை ஏற்படும். அதனால் கூட்டணி அரசை பாதுகாக்கும் முயற்சியை மேற்கொள்வதை கைவிட வேண்டும்.

கர்நாடகத்தில் நடைபெறும் அரசியல் பிரச்சினையில் கூட்டணி அரசு கவிழ்ந்தால் அதுபற்றி கவலைப்பட தேவை இல்லை. கூட்டணி அரசை பாதுகாக்கும் முழு பொறுப்பை குமாரசாமிக்கு வழங்க வேண்டும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் நல்லுறவை பேணும்படி குமாரசாமிக்கு அறிவுறுத்த வேண்டும். காங்கிரஸ் மந்திரிகளின் இலாகாக்களில் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் தலையிடுவதை நிறுத்த அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News