செய்திகள்

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்- 15 பேரை விடுவித்தது உச்ச நீதிமன்றம்

Published On 2019-04-30 16:33 GMT   |   Update On 2019-04-30 16:33 GMT
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 15 பேரை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. #AntiSikhRiots #SupremeCourt
புதுடெல்லி:

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது டெல்லியின் திரிலோக்பூர் பகுதியில் வீடுகளுக்கு தீ வைத்ததாகவும், ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறையில் ஈடுபட்டதாகவும் பலர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் 1996ம் ஆண்டு 89 பேரை குற்றவாளிகளாக அறிவித்து, அவர்களுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அனைவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 70 பேரின் தண்டனையை உறுதி செய்து, 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. மீதமுள்ள 19 பேரில் 16 பேர் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது மரணம் அடைந்துவிட்டனர். 3 பேர் தலைமறைவாக இருந்ததால், அவர்களின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து, 15 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 15 பேரையும் இன்று விடுவித்து தீர்ப்பளித்தது.

குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததாலும், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் நேரடியாக சாட்சியம் அடையாளம் காட்டாததாலும் 15 பேரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். #AntiSikhRiots #SupremeCourt
Tags:    

Similar News