இந்தியா

பலியான வாலிபர்கள்.

கேரளாவில் வெப்ப அலைக்கு ஒரே நாளில் 3 பேர் பலி

Published On 2024-05-02 05:01 GMT   |   Update On 2024-05-02 05:01 GMT
  • கேரள மாநிலத்தில் பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரிக்கு மேல் இருந்து வருகிறது.
  • தேர்தல் நாளில் வாக்களிக்க வந்த வாக்காளர்களில் 10 பேர் சுருண்டு விழுந்து பலியாகினர்.

திருவனந்தபுரம்:

கேரளா மற்றும் தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் ஏப்ரல் மாத தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பகல் நேரத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும் நிலையில், கேரள மாநிலத்தில் பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரிக்கு மேல் இருந்து வருகிறது.

வெப்பஅலை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் மாநிலங்களில் கேரளாவும் இடம் பெற்றிருக்கிறது. இதனால் மக்கள் வெயில் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் அதிக வெப்பம் காரணமாக உயிர்பலி ஏற்படுவதும் அரங்கேறி வருகிறது. தேர்தல் நாளில் வாக்களிக்க வந்த வாக்காளர்களில் 10 பேர் சுருண்டு விழுந்து பலியாகினர். அதனைத்தொடர்ந்து பொது இடங்களுக்கு வந்த 3 பேரும் அடுத்தடுத்து இறந்தனர்.

கடும் வெயில் காரணமாகவே அவர்கள் பலியாகியிருப்பது தெரியவந்தது. இதனால் பகல் நேரத்தில் தேவையில்லாமல் வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை கேட் டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடும் வெயில் காரணமாக நேற்று ஒரே நாளில் 2 வாலிபர்கள் மற்றும் ஒரு பெண் என 3 பேர் இறந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் மட்டும் 2 பேர் பலியாகி இருக்கின்றனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

கோட்டயம் மாவட்டம் வைக்கம் தாளை யோலப்பறம்பு தாளப்பாறை பகுதியை சேர்ந்தவர் ஷமீர்(வயது35). இவர் நேற்று வைக்கம் கடற்கரை பகுதியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாட வந்திருந்தார்.

மதிய நேரத்தில் அவர் கிரிக்கெட் விளையாடினார்.அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்தார். இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியை சேர்ந்த ரமணி-அம்புஜத் தம்பதியரின் மகன் சபரீஷ்(27). இவர் நேற்று பகல் நேரத்தில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது சபரீஷ் திடீ ரென சுருண்டு விழுந்தார். அருகில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருந்தபோதிலும் சபரீஷ் பரிதாபமாக இறந்து விட்டார்.

பாலக்காடு தென்கரை பகுதியை சேர்ந்த சரோஜினி(56) என்ற பெண் நேற்று பகலில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்தார். சுய நினைவின்றி கிடந்த அவரை அந்த பகுதியில் நின்றவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இருந்தபோதிலும் அவர் பரிதாபமாக இறந்தார்.

சுருண்டு விழுந்து இறந்த 2 வாலிபர்கள் உள்ளிட்ட 3 பேரும் கடும் வெயில் காரணமாகவே இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர்களது இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இருந்தபோதிலும் கேரளாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Tags:    

Similar News