செய்திகள்

பயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி

Published On 2019-04-18 09:39 GMT   |   Update On 2019-04-18 10:06 GMT
காஷ்மீர் மாநிலம் முழுவதும் இருந்த பயங்கரவாதத்தை தற்போது 2 மாவட்டங்களுக்குள் அடக்கி இருப்பதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். #PMModi #BJP
காந்திநகர்:

பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தார்.

இன்று காலை அம்ரேலி நகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசினார். அவர் கூறியதாவது:-

குஜராத் மாநிலம்தான் எனது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது. இங்கு நான் கற்றுக் கொண்டது ஏராளம். அந்த படிப்பினை காரணமாகத் தான் பிரதமர் பதவியில் என்னால் திறம்பட செயல்பட முடிகிறது.

2017-ம் ஆண்டு சீனாவுடன் டோக்லாம் எல்லைப் பகுதியில் திடீர் பிரச்சனை ஏற்பட்டது. குஜராத்தில் நான் கற்றுக் கொண்ட பாடம்தான் அந்த பிரச்சனையை தீர்க்க உதவியாக இருந்தது.

இன்று இங்கு நீங்கள் திரண்டிருப்பது தேர்தல் பிரசார பேரணிக்காக அல்ல. நான் உங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

குஜராத்தில் சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டம் 40 ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி முடிக்கப்பட்டு இருந்தால் குஜராத் இன்று வளமான மாநிலமாக இப்போது இருப்பதை விட மிக சிறப்பாக இருந்து இருக்கும்.

குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு நான் பிரமாண்ட சிலை அமைத்ததை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்ததன் மூலம் நான் நேருவுக்கு எந்த அவமரியாதையும் செய்யவில்லை. இதை அரசியல் ஆக்கக் கூடாது.

காஷ்மீர் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் பயங்கரவாதம் இருந்தது. அந்த மாநிலம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் நாங்கள் வந்தபிறகு பயங்கரவாதத்தை கடுமையாக ஒடுக்கி இருக்கிறோம். அந்த மாநிலம் முழுவதும் இருந்த பயங்கரவாதத்தை தற்போது 2 மாவட்டங்களுக்குள் அடக்கி இருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் காஷ்மீரில் எந்த பெரிய குண்டு வெடிப்பும் நடக்கவில்லை என்பதை பொதுமக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

காஷ்மீரில் புல்வாமா பகுதியில் தாக்குதல் நடத்தியதற்கு நாம் சரியான பதிலடி கொடுத்து இருக்கிறோம். அப்படி பதிலடி கொடுத்த பிறகு பாகிஸ்தான் பணிந்ததை நீங்களே பார்த்தீர்கள்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளிப்படையாகவே போனில் பேசி சமரசத்திற்கு தயாராக இருந்தேன் என்று கூறினார். இதற்கு முன்பு பாகிஸ்தான் தரப்பில் இருந்து இப்படி பேசப்பட்டது இல்லை. அத்தகைய வலுவான நிலையை நாம் உருவாக்கி இருக்கிறோம்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சி, கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில்தான் மிக மோசமான தோல்வி தழுவியது. வரலாறு காணாத அளவுக்கு அந்த கட்சிக்கு வெற்றி எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்தது.

என்றாலும் அவர்களுக்கு இன்னும் ஆசை விடவில்லை. இந்த தடவை மிக குறைவான இடங்களில் போட்டி போடும் காங்கிரசார் ஆளும் கட்சியாக மாற கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு மோடி பேசினார். #PMModi #BJP
Tags:    

Similar News